Tuesday, 01 September 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

“10 ஆண்டுகளில் 152 முறை வினாத்தாள் கசிந்தும் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை” - ராகுல் காந்தி

புது டெல்லி: “கடந்த 10 ஆண்டுகளில் 152 முறை தேர்வு வினாத்தாள்கள் கசிந்தும், அதில் ஒருவருக்குக் கூட தண்டனை வழங்கப்படவில்லை” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "உலகிலேயே மிகச் சிறந்த கல்வி அமைப்புகளில் ஒன்றாக அறியப்பட்ட நமது கல்வி அமைப்பு, இன்று முறைகேடுகள் நிறைந்த அமைப்பாக மாறியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் 152 முறை வினாத்தாள் கசிவு நடந்துள்ளது. கணக்கிட்டுப் பார்த்தால், ஏறக்குறைய மாதத்துக்கு ஒன்று என்ற விகிதத்தில் இது நிகழ்கிறது. ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான மாணவர்களிடம், 'நீங்கள் அனுபவித்த அனைத்து மன அழுத்தத்தையும் மீண்டும் அனுபவிக்க வேண்டியிருக்கும்' என்று சொல்லப்படுகிறது. அதன்பிறகு, 'எங்களுக்கு அதைப் பற்றிக் கவலையில்லை' என்று அவர்கள் கூறுகிறார்கள்.வினாத்தாள் கசிவால் ஏழரை கோடி மாணவர்களும் அவர்களின் குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், கடந்த 10 ஆண்டுகளில் 152 வினாத்தாள் கசிவுகள் நடந்துள்ளன, ஆனால், ஒருவருக்கு கூட தண்டனை வழங்கப்படவில்லை. எனவே, யாரோ ஒருவரோ அல்லது ஒரு குழுவோ நமது கல்வி அமைப்பை, அதாவது இந்தியாவின் மிக மதிப்புமிக்க சொத்தை அழித்து வருகிறார்கள். நமது மாணவர்களின் வாழ்க்கையைச் சீரழிக்கிறார்கள். அவர்களுக்கு தண்டனை வழங்காமல் அரசு என்ன செய்கிறது?.

நமது மாணவர்கள் என்ன தவறு செய்தார்கள்? அவர்களிடம் பாதுகாப்புப் படையினர் ஏன் ஆயுதங்களை காட்டுகின்றனர். அவர்கள் அமைதியாகப் போராடுகிறார்கள், கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள், இந்த நாடு அவர்களுக்குச் செய்ய வேண்டியதைத்தான் கேட்கிறார்கள். வினாத்தாள் கசிவால் குழந்தைகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மாணவர்கள் அளவற்ற மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள்.இந்தக் கல்வி அமைப்பு முறைகேடானது என்பது மட்டுமல்ல, இது சாதாரண மக்களால் தாங்க முடியாத அளவுக்கு அதிக செலவு பிடிப்பதாகவும் உள்ளது. இது ஒவ்வொரு இளைஞருக்கும் தெரிந்த ஒரு புள்ளிவிவரம், ஆனால், இந்திய அரசுக்கு மட்டும் இது தெரியவில்லை.

நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் குடும்பங்கள் செலவிடும் மொத்தத் தொகையானது, அரசின் ஆண்டு கல்வி பட்ஜெட்டுக்கு சமமாக உள்ளது. இந்திய அரசின் கல்வி பட்ஜெட்டின் மதிப்பு ரூ. 1.4 லட்சம் கோடியாகும். அதே வேளையில், நீட் தேர்வு எழுதும் குடும்பங்கள் ஆண்டுதோறும் ரூ.1.32 லட்சம் கோடி என்ற அளவிலான தொகையைச் செலவிடுகின்றன” என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.