Friday, 16 October 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

கோவையில் முதல்வர் விஜய் 10 கி.மீ தூரம் ‘ரோடு ஷோ’ - ஹைலைட்ஸ் தருணங்கள்

கோவை: கோவை மாநகருக்கு வருகை தந்த தமிழக முதல்வர் விஜய்யின் 10 கி.மீ. தூர ரோடு ஷோவில் வழிநெடுக பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

காந்திபுரத்தில் ரூ.300 கோடியில் கட்டப்பட்ட பெரியார் அறிவுலகம் நூலகத்தை திறக்க சென்னையில் இருந்து தனி விமானத்தில் கோவைக்கு வந்தார். முதல்வர் ஆன பின்பு இன்று (அக்.16) முதல்முறையாக கோவைக்கு வந்த விஜய், கோவை விமான நிலையத்தில் இருந்து காந்திபுரம் பெரியார் அறிவுலகம் நூலகம் வரை 10 கி.மீ. நீளத்துக்கு ரோடு ஷோவில் வலம் வந்தார்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் எவ்வித பிரச்சாரங்களும் விஜய் மேற்கொள்ளவில்லை. இருந்தபோதிலும் கோவை மாவட்டத்தின் 10 தொகுதிகளில் 6 தொகுதிகளை தவெக வென்றது.

சட்டப்பேரவைத் தேர்தலில் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர், தாராபுரம் இடைத்தேர்தல்களுக்கு வந்தபோது கோவை விமானநிலையம் வழியாக திருப்பூர் மாவட்டத்துக்கு சென்றார்.

அதன்பின்னர் கோவைக்குள் அவர் வரவில்லை. முதல்வரான பின்பு முதல் முறையாக கோவை மாநகருக்குள் வருவதால் சாலையில் இரு புறங்களிலும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

அதேபோல் விமான நிலையத்திலும் கூடுதல் பாதுகாப்பு பணியில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர். முதல்வர் விஜய்யை விமான நிலையத்தில் வரவேற்க அமைச்சர்கள் ஆனந்த், சம்பத் குமார் மற்றும் விக்னேஷ் ஆகியோர் வந்திருந்தனர். மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், மேற்கு மண்டல காவல் துறை தலைவர் ரம்யா பாரதி விமான நிலையத்தில் முதல்வர் விஜயை பூங்கொடுத்து கொடுத்து வரவேற்றனர்.

ஓரங்கட்டிய ரசிகரை அழைத்து பேச்சு:

விமான நிலையத்தில் வாகனம் வெளியேறியபோது, மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ரெங்கராஜை விமான நிலையத்தில் கண்டறிந்து, முதல்வர் விஜய் அழைத்து ஒரு நிமிடம் பேசினார்.

இது தொடர்பாக ரெங்கராஜ் கூறும்போது, “மேட்டுப்பாளையம் விஜய் மன்ற நகரத் தலைவராக இருந்தேன். பல மன்ற பணிகளை மேட்டுப்பாளையத்தில் செய்துள்ளேன். கட்சி தொடங்கிய பிறகு, அரசியல் கட்சியினர் என்னை ஓரங்கட்டிவிட்டனர் என்றேன்.

அதற்கு பதிலளித்த முதல்வர் விஜய், ‘அதனை இங்கு பேச வேண்டாம். சென்னையில் பேசிக்கொள்ளலாம். கட்சியினர் உங்களைத் தொடர்பு கொள்வார்கள்’ என்றார்.

கூட்டத்தில் என்னை பார்த்து அடையாளம் கண்டறிந்து அழைத்தார். 1996-ம் ஆண்டு முதல் என்னையும், என் குடும்பத்தையும் நன்றாக தெரியும். கடந்த 3 ஆண்டுகளாக விஜய்யை பார்க்க முடியவில்லை. என்னை கண்டறிந்து பேசியதில் மகிழ்ச்சி” என்றார்.

தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த முதல்வர், விமானம் நிலையம் - காந்திபுரம் சாலையில் வாகனத்தில் பயணிக்க தொடங்கினர். ஆண்களை காட்டிலும் பெண்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. அவர்கள் விஜய்யை பார்த்து உற்சாகத்தில் கத்தி சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.


முதல்வரின் வாகனம் ஹோப்ஸ் காலேஜ் பேருந்து நிறுத்தத்தை கடந்த நிலையில், விஜய் வேனில் மேல் பக்கமாக ஏறி ரசிகர்களை தொடர்ந்து பார்த்தபடி வந்தார். அப்போது ரசிகர்கள் விஜய்யின் புகைப்படம் மற்றும் பதாகைகளை பிடித்தபடி பல்வேறு இடங்களில் வரவேற்பு அளித்தனர். கட்சித் துண்டுகளை அவர் மீது வீசினர்.

காந்திபுரம் பகுதியில் தனியார் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், முதல்வருக்கு வரவேற்பு அளித்தனர். காந்திபுரம் பகுதியில் பெரியார் அறிவுலகம் வளைவு அருகே பெண்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததால், லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டத்தில், 3 பேர் மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் முதலுதவி செய்து, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.