Friday, 19 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

கச்சா எண்ணெய் விலை 130 டாலரை தாண்டாத வரை பெட்ரோல், டீசல் விலை உயராது:

புதுடெல்லி: கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 130 அமெரிக்க டாலரை தாண்டாத வரை இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, ஒரு பேரலின் விலை 120 டாலரை எட்டி உள்ளது கவனிக்கத்தக்கது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு வட்டாரங்கள் கூறியது: இந்தியாவில் போதுமான அளவு இருப்பு இருப்பதால் எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்பில்லை. கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 அமெரிக்க டாலர்களை எட்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இது 130 அமெரிக்க டாலரை எட்டாத வரை இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பில்லை.

நாட்டின் எந்த பங்க்கிலும் பெட்ரோல், டீசல் பற்றாக்குறை பிரச்சினை இல்லை. ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தி பாதையைத் தவிர வேறு இடங்களில் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் போதுமான அளவு விமான எரிபொருள் (Aviation Turbine Fuel-ATF) இருப்பு உள்ளது. இந்தியா ATF உற்பத்தியாளராகவும் ஏற்றுமதியாளராகவும் உள்ளது. எனவே, ATF குறித்து பீதி அடையத் தேவையில்லை. மற்ற நாடுகளைவிட இந்தியா சிறந்த நிலையில் உள்ளது.

மக்கள் 55 நாட்களுக்கு முன்பாகவே எல்பிஜி சிலிண்டரை முன்பதிவு செய்யும் காலம் இருந்தது. அது 15 நாட்களாக குறைந்த சம்பவங்களும் இருந்தன. எல்பிஜி எரிவாயு முன்பதிவு காலம் 21 நாட்களில் இருந்து 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன. பதுக்கல் மற்றும் கள்ளச் சந்தைப்படுத்தலைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எல்பிஜி உற்பத்தியை அதிகப்படுத்த சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. வணிக இணைப்புகளைவிட உள்நாட்டு நுகர்வோருக்கே எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படும்.

எல்பிஜி இறக்குமதிக்கான வாய்ப்புகளை இந்தியா தேடுகிறது. அல்ஜீரியா, ஆஸ்திரேலியா, கனடா, நார்வே போன்ற நாடுகள் இந்தியாவுக்கு எல்பிஜியை விற்க அணுகி உள்ளன என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.