Monday, 15 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

விண்வெளியில் பூமியைப் போல 140 டிரில்லியன் மடங்கு பிரம்மாண்ட கடல்

நமது பூமியில் உள்ள பரந்து விரிந்த கடல்களைப் பார்த்து நாம் பல நேரங்களில் ஆச்சரியப்படுவதுண்டு. ஆனால், ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் கணக்கில் கொண்டால் நமது பூமி வெறும் ஒரு சிறிய நீல நிறப் புள்ளிதான் என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு பிரம்மாண்ட கண்டுபிடிப்பு தற்போது நிகழ்ந்துள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் இதுவரை மனிதகுலம் கண்டிராத அளவுக்கு மிகப் பெரிய அளவிலான ஒரு நீர் ஆதாரத்தை விண்வெளியில் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். இது பூமியில் உள்ள அனைத்து கடல்களின் நீரை விட சுமார் 140 டிரில்லியன் மடங்கு அதிகமானது என்பது கற்பனைக்கே எட்டாத ஒரு விஷயமாகும்.

இந்த மெகா கடல் சாதாரணமாக விண்வெளியில் எந்த ஆதரவும் இல்லாமல் மிதக்கவில்லை. 'APM 08279+5255' என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு அதிவேக விண்மீன் மண்டலத்தின் நடுவேதான் இது அமைந்துள்ளது. இதை விஞ்ஞானிகள் குவாசார் என்று அழைக்கிறார்கள். இதன் மையப்பகுதியில் மிகவும் சக்திவாய்ந்த ஒரு சூப்பர்மாசிவ் கருந்துளை செயல்பட்டு வருகிறது.

அது தன்னைச் சுற்றியுள்ள வாயுக்களை எல்லாம் அசுர பசியுடன் ஈர்த்து விழுங்கி, ஈடு இணையற்ற ஒளியை உமிழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த இடம் பூமியில் இருந்து சுமார் 12 பில்லியன் ஒளி ஆண்டுகள் தூரத்தில் அமைந்திருக்கிறது. அதாவது பிரபஞ்சம் தோன்றி ஒரு சில பில்லியன் ஆண்டுகளே ஆன தொடக்கக் காலகட்டத்தின் ஒரு பதிவைத்தான் நாம் இப்போது பின்னோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

கண்டுபிடிப்பின் பின்னணி!

இந்த குவாசார் இவ்வளவு பிரகாசமாகத் தெரிவதற்கு ஈர்ப்பு விசை லென்சிங் என்ற ஒரு அறிவியல் நிகழ்வுதான் முக்கிய காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

குவாசாருக்கும் நமது பூமிக்கும் நடுவே உள்ள மற்றொரு விண்மீன் மண்டலம் ஒரு பெரிய பூதக்கண்ணாடி போலச் செயல்பட்டு, இதன் ஒளியை சுமார் நாற்பது மடங்கு பெரிதாக்கி நம் கண்களுக்குக் காட்டுகிறது. இந்த உருப்பெருக்கம் இல்லாவிட்டாலும் கூட, இந்த அமைப்பு நமது சூரியனைவிட நூறு டிரில்லியன் மடங்கு அதிக வெளிச்சம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மையத்திலிருந்து வெளியாகும் வாயுக்கள் ஒரு வினாடிக்கு ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாய்ந்து வெளியேறுகின்றன. பிரபஞ்சத்தின் ஆரம்ப காலகட்டத்திலேயே தண்ணீர் இவ்வளவு பரவலாக இருந்துள்ளது என்பதை இந்த ஆய்வு ஆணித்தரமாக உணர்த்துகிறது.

மேலும், அங்கு சூழ்ந்துள்ள தண்ணீர் மற்றும் கார்பன் மோனாக்சைடு மேகங்களின் அளவை வைத்துப் கணக்கிடும்போது, அந்த மையக் கருந்துளை இப்போது இருப்பதைவிட இன்னும் ஆறு மடங்கு பெரிதாக வளரக்கூடிய வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.