சென்னை: ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு ஒரு பவுன் தங்கம் வழங்கப்படும். ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை தவெக தலைவர் விஜய் இன்று வெளியிட்டார்
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் தவெக தலைவர் விஜய் இன்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். விஜய் வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் முதல் பிரதியை விவசாயி நாராயணன் பெற்றுக்கொண்டார், தொடர்ந்து விவசாயி நாராயணனுக்கு விஜய் சிறப்பு செய்தார். தொடர்ந்து பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களும் தவெக தேர்தல் அறிக்கையை பெற்றுக்கொண்டனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தவெக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
• வெற்றி மகளிர் திட்டம்: 60 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் ரூ.2500 வரவு வைக்கப்படும்.
• ஏழைப்பெண்களின் திருமணத்துக்கு 8 கிராம் தங்கம் மற்றும் பட்டுச்சேலை வழங்கப்படும்.
• 12-ஆம் வகுப்புவரை மாணவர்களின் இடை நிற்றலை தடுக்க மாணவர்களின் தாயாருக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.
• 12ஆம் வகுப்புக்குப் பிறகு பிஎச்டி வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் வரை பிணையில்லா கடன் வழங்கும் திட்டம்.
• ஒவ்வொருவருக்கும் வருடாந்திர உடல் பரிசோதனை, மலிவு விலை மருந்துகள் வழங்கப்படும்.
• 29 வயதுக்கு மேல் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு ரூ.4000, பிளஸ்டூ படித்தவர்களுக்கு மாதம் ரூ.2500 வழங்கப்படும்.
• போதைப்பொருள் இல்லா தமிழகம் உருவாக்கப்படும்
• குத்தகை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.
• ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.25 லட்சத்துக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் வழங்கப்படும்.
• ஏஐ மூலம் இலவசப் போட்டித் தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்படும்.
• நெல்லுக்கு குவிண்டாலுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.3500 வழங்கப்படும்
• கரும்புக்கு டன்னுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.4500 வழங்கப்படும்.
• முக்கிய நகரங்களில் கைத்தறி விற்பனை நிலையங்கள், ஷோரூம்கள் அமைக்கப்படும். நிலையற்ற நூல் விலை, மின்சார நெருக்கடியைப் பகிர்ந்துகொள்ள கைத்தறி, விசைத்தறி வைத்திருக்கும் ஒவ்வொரு நெசவாளர் குடும்பத்துக்கும் வங்கிகளின் மூலமாக ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் செலுத்தப்படும்.
• கைத்தறிகளுக்கான இலவச மின்சாரம் 500 யூனிட், விசைத்தறிகளுக்கான இலவச மின்சாரம் 1,500 யூனிட்டுகளாக உயர்த்தப்படும்.
• நெசவாளர்களுக்கு உற்பத்தி செலவைக் குறைக்க அவர்கள் வாங்கும் ரசாயனம், சாயங்களுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
• அனைத்து நெசவாளர்களுக்கும் ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு வழங்கப்படும். நெசவாளர்களின் முதியோர் ஓய்வூதியம் மாதம் ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்படும்.
• தமிழகத்தில் நெருக்கடியில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.15 ஆயிரம் கோடி ‘சேப் கிரெடிட் கியாரண்டி பண்ட்’ உருவாக்கப்படும்.
• ஜவுளித் துறையில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான பீக்ஹவர்ஸ் மின் கட்டணம் நிறுத்தி வைக்கப்படும். விரிவான ஆய்வுக்குப் பிறகு மின் கட்டணம் முறைப்படுத்தப்படும். இந்த நிறுவனங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு 100 சதவீத மின்சார வரி விலக்கு அளிக்கப்படும்.