Friday, 19 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

2028 ஒலிம்பிக்கில் தமிழக வீரர்கள் பதக்கம் வெல்ல அனைத்து உதவிகளும் வழங்கப்படும்: ஆதவ் அர்ஜுனா

சென்னை: 2028-ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் நமது வீரர் / வீராங்கணைகள் பதக்கங்கள் வெல்வதற்கு ஏற்ப, தேவையான அனைத்து உதவிகளையும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை வழங்கும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உறுதிபட தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர்களை, பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, நேற்று (23.05.2026) தலைமைச் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியது குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “தமிழ்நாடு முதல்வர் பொறுப்பேற்றது முதல் தொலைநோக்கு பார்வையுடன் பல்வேறு சிறப்பான திட்டங்களை தீட்டி வருகிறார். ஒலிம்பிக் போட்டிகளில் தமிழ்நாட்டின் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை வெல்ல செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டுவருகின்றன.

இந்த இலக்கினை அடைந்திடும் வகையில் எனது அலுவலக பணிகளை நாள்தோறும் காலை 7 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி, விளையாட்டுத் துறை உயர் அலுவலர்கள், விளையாட்டு வீரர்கள், விளையாட்டு சங்க நிர்வாகிகளுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் நீங்கள் எவ்வித சிரமுமின்றி எளிதாக என்னை எப்போது வேண்டுமானாலும் அணுகி உங்களது தேவைகளை தெரிவிக்கலாம்.

இதுவரை ஒலிம்பிக் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் ஹாக்கி உள்ளிட்ட குழுப் போட்டிகளில் மட்டுமே பதக்கங்கள் பெற்றுள்ளனர்; தனிநபர் பிரிவு போட்டிகளில் இதுவரை நாம் பதக்கங்கள் பெற்றதில்லை. இனி வருங்காலங்களில் இந்நிலையை மாற்றி, ஒலிம்பிக் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த உங்களைப் போன்ற இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்று, தனிநபர் பிரிவுகளிலும் பதக்கங்கள் வெல்லும் வகையில் தொலைநோக்கு செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்வதை நோக்கமாக கொண்டு இதற்கென அரசு உயர் அலுவலர்கள், விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் எனது கைபேசி எண்ணை உள்ளடக்கிய வாட்ஸாப் குழு உருவாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்கள் வெல்வது எவ்வளவு கடினமான முயற்சி என்பது விளையாட்டு வீரர் என்ற முறையில் எனக்கு நன்றாகத் தெரியும். எனவே, விளையாட்டு அறிவியல் அடிப்படையிலான பயிற்சிகள், ஊட்டச்சத்து மிக்க உணவு, உயர்தர பயிற்சி முகாம்கள், உளவியல் நிபுணர்களின் ஆலோசனைகள், சிறந்த பயிற்சியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தேவையான உதவிகளையும் வழங்கி, இந்தியாவை பதக்க மேடையில் நிலைநிறுத்தி தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க விளையாட்டுத் துறை தயாராக உள்ளது.

குறிப்பாக வரும் ஒலிம்பிக் போட்டியில் ஸ்குவாஷ் விளையாட்டு முதன்முறையாக சேர்க்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஸ்குவாஷ் உலகக் கோப்பைப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியில் 4 வீரர்களில் 3 பேர் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது பெருமைக்குரிய சாதனையாகும். இந்த உலகக் கோப்பை வெற்றியை தொடர்ந்து நம் அடுத்த இலக்காக ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்கங்கள் வெல்வதேதாகும்.

அந்த வகையில் 2028-ஆம் ஆண்டக்கான ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்ல விளையாட்டு மேம்பாட்டுத் துறை தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு செயலாளர் சஜ்ஜன்சிங் ரா சவான், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் ரெ. சுமன், பொது மேலாளர் எல். சுஜாதா மற்றும் தமிழ்நாடு ஸ்குவாஷ் சங்க பொதுச் செயலாளர் சைரஸ் பூன்ச்சா, ஸ்குவாஷ் விளையாட்டு வீரர் அபய் சிங், பயிற்சியாளர் மற்றும் ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனைகள் உடனிருந்தனர்.