Tuesday, 01 September 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

ஜூன் 21-ல் நடக்கும் நீட் மறுதேர்வு 100% பிழையற்றதாக இருக்கும்: மத்திய அமைச்சர் உறுதி

புதுடெல்லி: ஜூன் 21-ல் நடைபெற உள்ள நீட் மறுதேர்வு 100% பிழையற்றதாக இருப்பதை உறுதி செய்வதில் அரசு தீவிரமாக இருப்பதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற 'பாரத் கல்வி மாநாடு 2026' நிகழ்ச்சியில் உரையாற்றிய தர்மேந்திர பிரதான், “தேசிய கல்விக் கொள்கை 2020 மூலமாக இந்தியாவின் கல்வி முறைக்கு நாங்கள் ஒரு புதிய திசையை வழங்கி வருகிறோம். இந்த கொள்கையின் அடிப்படையில் தாய்மொழி வழி கல்விக்கும், குழந்தைகளிடையே விமர்சன சிந்தனை மற்றும் புதுமைகளை ஊக்குவிப்பதற்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

தாய்மொழி வாயிலாக கிடைக்கும் அறிவு சமூகத்துக்கு எளிமையானதாகவும், மிகவும் பயனுள்ளதாகவும், பரவலானதாகவும் இருக்கும். இந்த அணுகுமுறை மெக்காலே மனப்பான்மையைக் கடந்து, இந்திய அறிவு மரபை மீண்டும் நிலைநிறுத்துவதற்கு வழி வகுக்கிறது.

இன்றைய செயற்கை நுண்ணறிவு சகாப்தத்தில் தேசிய கல்விக் கொள்கை 2020-ன் மூலமாக திறன் சார்ந்த, தகுதி அடிப்படையிலான, பல்துறை சார்ந்த ஒரு முழுமையான கல்வி அமைப்பை வலுப்படுத்த நாங்கள் பணியாற்றி வருகிறோம். இது நமது இளைஞர்கள் உலகளாவிய தேவைகளுக்கு ஏற்ப தங்களைத் தயார்படுத்திக்கொள்ள உதவுகிறது.

அதேநேரத்தில், பள்ளிக் கல்வியானது குழந்தைகளின் மனநலம், ஊட்டச்சத்து, திறன் மேம்பாடு,விளையாட்டுச் செயல்பாடுகள் ஆகியவற்றிலும் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறது. நமது கல்வி அமைப்பை வெறும் பட்டங்களை மையமாகக் கொண்ட நிலையில் இருந்து திறன்களை மையமாகக் கொண்ட நிலைக்கு உயர்த்த நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.

இந்த முழுமையான அணுகுமுறையுடன் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் வளர்ச்சியடைந்த இந்தியா 2047 எனும் இலக்கை நோக்கி நாங்கள் முன்னேறி வருகிறோம். உலகமே ஒரு குடும்பம் என்ற உணர்வுடன் இந்தியா உலக அரங்கில் தனது பங்கை மேலும் வலுப்படுத்தி வருவதுடன், உலகளாவிய தெற்கு நாடுகள் தொடர்பான தனது பொறுப்புகளை நிறைவேற்றுவதை நோக்கியும் முன்னேறி வருகிறது.ஜூன் 21 அன்று நடைபெற உள்ள நீட் மறுதேர்வு 100% பிழையற்றதாக இருப்பதை உறுதி செய்வதில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தேர்வு மாபியா காரணமாக தகுதியுள்ள ஒரு மாணவர் கூட தனக்குரிய இடத்தை இழக்கக்கூடாது என்பதில் அதிகாரிகள் உறுதியாக உள்ளனர்.

மறுதேர்வு காரணமாக சுமார் 22 லட்சம் மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர். அதை புரிந்து கொண்டு, அதற்கு பொறுப்பேற்று நான் இன்று இதைச் சொல்கிறேன்: நாங்கள் சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது” என தெரிவித்தார்.