Tuesday, 01 September 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

தங்கம் விலை மேலும் ரூ.2,400 சரிவு - இரு தினங்களில் ரூ.5,000+ வீழ்ச்சி!

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ.2,400 குறைந்து, ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்துக்கு விற்பனை ஆகிறது. கடந்த இரு தினங்களில் மட்டும் ரூ.5,000-க்கும் மேலாக குறைந்திருப்பது கவனிக்கத்தக்கது.

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம், சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் நிலை ஆகியவற்றால், தங்கத்தின் விலை 9 நாட்கள் வரை குறைந்தது. அதன்பிறகு, நேற்று முன் தினம் பவுனுக்கு ரூ.1,040 உயர்ந்தது. பின்னர் மீண்டும் நேற்று பவுனுக்கு ரூ.3,200 குறைந்தது.

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ.2,400 குறைந்து, ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.300 குறைந்து, ரூ.13,500-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் ஒரு பவுனுக்கு ரூ.2,616 குறைந்து, ரூ.1 லட்சத்து 17ஆயிரத்து 824 ஆக இருந்தது.இதுபோல, வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.260 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.2 லட்சத்து 60 ஆயிரமாகவும் இருந்தது.

தங்கம் விலை குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கச் பொதுச்செயலாளர் சாந்தக்குமார் கூறுகையில், “சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால், தங்கத்தின் விலை ஒரு டிராய் அவுன்ஸ் 4,300 டாலரில் இருந்து இப்போது, 4,100 டாலர் வரை இறங்கியுள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது. இதுதவிர, சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை குறைந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. ஓரிரு வாரங்கள் வரை தங்கம் விலையில் ஏற்ற இறக்கமாக இருக்கும்” என்றார்.