Monday, 15 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

“திருமாவளவனின் 35 ஆண்டு கால சமூக நீதிக் கனவுகளை தவெக ஆட்சி நிறைவேற்றும்” - ஆதவ் அர்ஜுனா

சென்னை: “விசிக தலைவர் திருமாவளவனின் 35 ஆண்டுகால சமூக நீதிக் கனவுகள், சமத்துவக் கோட்பாடுகளை தவெக ஆட்சி நிறைவேற்றும் என உறுதியாகத் தெரிவிக்கிறேன்” என தவெக எம்எல்ஏ ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “தமிழ்நாட்டில் ஜனநாயக வழியில் நடைபெற்ற 'மௌனப் புரட்சி'யை வரவேற்கும் விதமாகவும், நடைபெறவிருக்கும் மிகப் பெரிய அதிகார மாற்றத்திற்கு ஆதரவளிக்கும் வகையிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், என் அரசியல் ஆசானும், மாபெரும் தலைவருமான தொல்.திருமாவளவன் ஆதரவு அளித்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் கடிதத்தை பெற்று எங்களிடம் மகிழ்ச்சியோடும், நம்பிக்கையோடும் ஒப்படைத்துள்ளார். அதற்கு நாங்கள் மட்டுமல்ல, எதிர்கால தமிழக வரலாறும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளது.

மேலும், வெறும் நன்றி என்பதோடு மட்டுமல்ல... விசிக தலைவர் திருமாவளவனின் 35 ஆண்டு கால அரசியல் பயணத்தின் அரசியல் லட்சியங்கள், சமூக நீதிக் கனவுகள், சமத்துவக் கோட்பாடுகள், நடைபெறப்போகும் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் நிறைவேறும் என்பதையும் உறுதியாகத் தெரிவிக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.