பெரம்பலூர்: பெரம்பலூரில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக்காட்சி வாயிலாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆலத்தூர் வட்டம் செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.18 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 புதிய கூடுதல் வகுப்பறைகள் மற்றும் கொட்டரை அரசு உயர் நிலைப்பள்ளியில் ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 புதிய கூடுதல் வகுப்பறை கட்டடங்களையும், மின்சாரத்துறை சார்பில், குன்னம் வட்டம், வெண்மணியில் ரூ.5 கோடியே 34 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய துணை மின் நிலையம் மற்றும் வேப்பந்தட்டை வட்டம் மேட்டுப்பாளையம் ஊராட்சியில் ரூ.6 கோடியே 88 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய துணை மின் நிலையத்தினையும் காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்வினை மாவட்ட வருவாய் அலுவலர் க.கண்ணன் அவர்கள் மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்திலிருந்து நேரலையில் பார்வையிட்டு, குத்து விளக்கேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
வெண்மணி துணை மின் நிலையத்தின் மூலம் குன்னம், கல்லம்புதூர், அந்தூர், வரகூர், பெரியவெண்மணி, நல்லறிக்கை, புதுக்குடிசை, மேலமாத்தூர், கீழமாத்தூர், கொத்தவாசல் ஆகிய கிராமங்களைச் சார்ந்த சுமார் 4,530 மின் நுகர்வோர்கள் சீரான மின்சாரம்பெற்று பயன் பெறுவார்கள். அதேபோல மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தின் மூலம் மேட்டுப்பாளையம், பிரம்மதேசம், வாலிகண்டபுரம், சாத்தனவாடி, வி.களத்தூர், வி.ஆர்.எஸ்.எஸ்புரம், வல்லாபுரம், அனுக்கூர், அ.குடிக்காடு ஆகிய கிராமங்களை சேர்ந்த சுமார் 10,000 மின் நுகர்வோர்கள் சீரான மின்சாரம் பெற்று பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மின்சாரத்துறை மேற்பார்வை பொறியாளர் மேகலா, அட்மா தலைவர் வீ.ஜெகதீசன், நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன், செயற் பொறியாளர்கள் பரமேஸ்வரி, அசோக்குமார், உதவி செயற்பொறியாளர்கள் வில்வனேஸ்வரன், அழகர், வேப்பந்தட்டை வட்டாட்சியர் துரைராஜ் மற்றும் மின் பகிர்மான கழக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.