Saturday, 20 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

தமிழகத்தில் வெப்பநிலை 5 டிகிரி உயரும்!

சென்னை: தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை நாளை முதல் 16-ம் தேதி வரை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “வடக்கு மத்தியப் பிரதேசம் முதல் தென் தமிழகம் வரை விதர்பா, மத்திய மகாராஷ்டிரா, மரத்வாடா மற்றும் உள் கர்நாடகா வழியாக சுமார் 900 மீட்டர் உயரத்தில், ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக நாளை (ஏப்.13) முதல் 18-ம் தேதி வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

உள் தமிழக மாவட்டங்களில் நாளை முதல் 16-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கமான அளவை ஒட்டியே இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 80 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.

இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் அடையாமடை, தென்காசி மாவட்டம் ஆயிக்குடியில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.