Monday, 15 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

51,000+ இளைஞர்களுக்கு அரசு பணிக்கான நியமன கடிதம் வழங்கினார் பிரதமர் மோடி

புதுடெல்லி: அரசுப் பணிகளில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 51,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு பணி நியமனக் கடிதங்களை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.

ரோஜ்கார் மேளா (வேலைவாய்ப்பு முகாம்) திட்டத்தின் மூலம் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு புதிதாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை 18 வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில், 19வது வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற்றது. இதில் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் 51,000-க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன கடிதங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு இன்று ஒரு மிக முக்கியமான நாள். இன்று 51,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் அரசுப் பணிக்கான நியமன ஆணைகளைப் பெற்றுள்ளனர்.

பணி நியமனம் பெற்றுள்ள இவர்கள் அனைவரும் நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் முக்கிய பங்காளிகளாக இணைந்துள்ளனர். ரயில்வே, வங்கித்துறை, பாதுகாப்புத் துறை, சுகாதாரம், கல்வி மற்றும் பல துறைகளில் இவர்கள் அனைவரும் புதிய பொறுப்புகளை ஏற்க உள்ளனர்.

வரும் ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் லட்சியத்தை நிறைவேற்றுவதில் நீங்கள் அனைவரும் முக்கிய பங்காற்ற உள்ளீர்கள். இந்த சாதனைக்காக உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன்.

வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான பயணத்தை விரைவுபடுத்துவதில் இந்திய இளைஞர்கள் மிக முக்கிய பங்காற்றி வருகிறார்கள். இளைஞர் சக்திக்கு புதிய வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் எங்கள் அரசு கொண்டுள்ள உறுதியை வேலைவாய்ப்பு முகாம் பிரதிபலிக்கிறது. இந்தியாவின் இளைஞர்கள் குறித்தும் நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்தும் உலகம் மிகுந்த எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கிறது” என தெரிவித்தார்.

இன்று நாடு முழுவதும் 47 இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதுவரை 18 வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 12 லட்சம் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்ட நிலையில், இன்று நடைபெற்ற 19வது வேலைவாய்ப்பு முகாம் மூலம் இந்த எண்ணிக்கை 12.51 லட்சமாக உயர்ந்துள்ளது.