Tuesday, 01 September 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

செங்கல்பட்டு சீர்திருத்த இல்லத்தில் இருந்து தப்பிய 6 பேர் கோவையில் பிடிபட்டனர்!

கோவை: செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் பகுதியில் உள்ள அரசு சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து கடந்த 12-ம் தேதி 10 சிறுவர்கள் தப்பிச் சென்றனர். இவர்களை செங்கல்பட்டு போலீஸார் தேடி வந்தனர்.

இந்நிலையில், கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸார் ரயில் நிலையம் சாலையில் நேற்று (ஜூலை 13) இரவு வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது ரயில் நிலையம் வளாகத்தில் உள்ள பயணிகள் படுத்திருக்கும் இடத்தில் மூன்று சிறுவர்களை போலீஸார் பிடித்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பிடிபட்டவர்கள் செங்கல்பட்டு சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்பியவர்கள் என்பது தெரிந்தது. இதையடுத்து மூவரையும் போலீஸார் பிடித்தனர்.

அதேபோல் போத்தனூர் போலீஸார், போத்தனூர் பகுதியில் இன்று (ஜூலை 14) அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சந்தேகிக்கும் வகையில் சுற்றிய நபரை பிடித்து விசாரித்துள்ளனர். அவரும் செங்கல்பட்டு சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்பியவர் எனத் தெரிந்தது. இதேபோல் வெள்ளலூர் பகுதியில் சுற்றிய மேலும் இருவரையும் போலீஸார் பிடித்துனர்.

இது குறித்து போலீஸார் கூறியது: ”திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த ஒருவர், சென்னையைச் சேர்ந்த 4 பேர் என மொத்தம் ஆறு சிறுவர்கள் கோவையில் பிடிபட்டுள்ளனர். இவர்கள் செங்கல்பட்டு சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்பியவர்களாவர். பிடிபட்ட 6 பேரும் செங்கல்பட்டு போலீஸாரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டனர்.

இதில் இரண்டு பேரும் மீது கொலை வழக்குகள் உள்ளன. மற்றவர்கள் மீது அடிதடி உள்ளிட்ட சிறு சிறு வழக்குகள் உள்ளன. கோவையில் பிடிபட்டபோது இருசக்கர வாகனத்தையும், செல்போனையும் இவர்கள் திருடியது தெரியவந்தது” என்று போலீஸார் தெரிவித்தனர்.