கிட்டத்தட்ட 4 வருடங்களுக்குப் பிறகு விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் படம். தொடர்ச்சியாக ஹிட் மேல் ஹிட் கொடுத்து ஜென்ஸீக்களின் ஆதர்ச நாயகனாக வளர்ந்திருக்கும் பிரதீப் ரங்கநாதன், அனிருத் இசையில் ஹிட் பாடல்கள் என நீண்ட காத்திருப்புக்குப் பின் வெளியாகி இருக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LiK) எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
படத்தின் கதை 2040-ஆம் ஆண்டு சென்னையில் நடக்கிறது. மனிதர்களின் காதலை தீர்மானிக்கும் ஒரு மொபைல் செயலிதான் படத்தின் மையக்கரு. கமிட்மென்ட், பிரேக் அப், காதலின் அளவு என அனைத்தையும் வரையறுக்கும் அந்த செயலியை உருவாக்கி பெரும் பணக்காரராக இருக்கிறார் சூரியன் (எஸ்.ஜே.சூர்யா).
இன்னொரு பக்கம் தொழில்நுட்ப வாடையே இல்லாமல் இயற்கை சூழ்ந்த ஓர் இடத்தில் வாழ்ந்து வரும் அன்புக் கடலின் (சீமான்) மகன் ‘வைப்’ வாஸி (பிரதீப் ரங்கநாதன்). சிறுவயது முதல் தாயின் அரவணைப்பு இன்றி செல்போனுக்கு அடிமையாகி வளரும் தீமா (கீர்த்தி ஷெட்டி) மீது கண்டதும் காதல் வருகிறது ஹீரோவுக்கு. மொபைல் போனுக்கு பழக்கப்படாத அவர், நாயகிக்காக புதிய போன் ஒன்றை வாங்கி ‘Lik’ செயலியையும் பதிவிறக்கம் செய்கிறார். அதன் மூலம் இணையும் இருவரும் காதலில் விழுகின்றனர்.
ஒரு கட்டத்தில் காதலின் அளவை சொல்லும் ஒரு புதிய அப்டேட்டை அறிமுகம் செய்கிறார் அந்த செயலியின் நிறுவனர் சூரியன். இந்த அப்டேட் கொடுக்கும் தரவால் நாயகனிடமிருந்து நாயகி விலகிச் செல்கிறார். இதன் பிறகு என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக் கதை.
படம் தொடங்கியதுமே எதிர்காலச் சென்னையை ஒரு நவீன தொழில்நுட்ப நகரமாக கண்முன் நிறுத்தியுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். வானளாவிய கட்டிடங்கள், ஹாலோகிராஃபிக் விளம்பரப் பலகைகள், பறக்கும் கார்கள் என ஒரு ஹாலிவுட் தரத்திலான மெகா சிட்டியை நாம் காண்கிறோம். இதுவே நம்மை ‘அட’ போடவைத்து உள்ளே இழுத்து விடுகிறது.
தனது முந்தைய படங்களைப் போலவே இதிலும் காதலே பிரதானம். ஆனால் இந்த முறை அதற்கு ஒரு ‘ஃப்யூச்சரிஸ்டிக்’ பாணியிலான கதையை எழுதி, ஒரு புதிய களத்துடன் வந்திருக்கிறார். படம் முழுக்க வைக்கப்பட்டுள்ள எதிர்கால குறியீடுகள் ஈர்க்கின்றன.