கோவை: கோவை, துடியலூர் அருகே உள்ள இடிகரை கிராமத்தில், கல்விப் பணியில் ஒரு நூற்றாண்டைக் கடந்து சாதனைகளை ஈன்று வரும் அரசு உயர் நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
1926-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட பள்ளியில் 100-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி இந்த பள்ளிக்குத் தேவையான பொருட்களை 'கல்விச் சீர்' ஆக வழங்கும் நெகிழ்ச்சியான நிகழ்வு நடைபெற்றது. சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயிலும் இப்பள்ளிக்கு, அந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள் காட்டிய கல்விச்சீர் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
கல்விச் சீரால் நெகிழ வைத்த 100வது ஆண்டு விழா
இந்த விழாவில் 108 தட்டுகளில் கல்விச் சீர் வரிசைகளை முன்னாள் மாணவர்கள், தற்போதைய மாணவ - மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
தட்டுகளில் பழங்கள், பூக்கள், இனிப்புகள் மட்டுமின்றி, பள்ளிக்கு அன்றாடம் தேவைப்படும் பேனா, பென்சில், கலர் பென்சில், ஸ்கெட்ச், சாக்பீஸ், டஸ்டர், நோட்டுப் புத்தகங்கள், கடிகாரங்கள், தண்ணீர் தம்ளர்கள் மற்றும் மேப்கள் எனப் பல பொருட்களைச் சீராகக் கொண்டு வந்து பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். இல்லத் திருமண விழாவைப் போல, தனது கிராமத்துப் பள்ளியை மக்கள் கொண்டாடிய விதம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
பின்னர் நடந்த நிகழ்ச்சியில்,1926-ல் இந்த பள்ளியை தொடங்க நிலம் மற்றும் நிதியுதவி செய்த முன்னோர்களின் குடும்பத்தினர் மேடைக்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். மேலும், பள்ளியில் பணியாற்றிய முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் பல்துறைகளில் சாதனை படைத்து வரும் முன்னாள் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு ஒருவாரையொருவர் பரஸ்பர நட்பை பரிமாறி கொண்டனர்.