வாஷிங்டன்: அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகம் நடத்திய சமீபத்திய ஆய்வில், அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆய்வின் மூலம் தமிழகத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
பொதுவாக, கடல் நீர் உப்புத்தன்மை கொண்டது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், கொலராடோ போல்டர் பல்கலைக்கழகம் நடத்திய சமீபத்திய ஆய்வில், இந்தியப் பெருங்கடலின் உப்புத்தன்மை வேகமாக குறைந்து வருவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கடலுக்கு உப்புதன்மை என்பது ரொம்ப முக்கியம். காரணம், இந்த உப்புதான் உலகெங்கிலும் வெப்பத்தை எவ்வாறு நீரோட்டங்கள் விநியோகிக்கின்றன என்பதிலும், கடல்வாழ் உயிரினங்கள் வாழும் சூரிய ஒளி படும் மேற்பரப்பிற்கு ஊட்டச்சத்துக்கள் எவ்வளவு எளிதாக சென்றடைகின்றன என்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறது. 'நேச்சர் கிளைமேட் சேஞ்ச்' என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, கடந்த 60 ஆண்டுகளில் உலக வெப்பமயமாதல் காரணமாக கடல் நீரோட்டங்கள் மாறிவிட்டது என கொலராடோ போல்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மாற்றங்கள், அதிக அளவிலான நன்னீரை தெற்கு இந்தியப் பெருங்கடலுக்குள் கொண்டு சேர்ப்பதாக கூறப்படுகிறது. இப்படி நடப்பது, கடல் மற்றும் வளிமண்டலம் எவ்வாறு ஒன்றோடு ஒன்று இணைவதை மாற்றியமைக்கும். நாம் எல்லோரும காலநிலையை ஒழுங்குப்படுத்துவது அமேசான் காடுகள்தான் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். அது உண்மை கிடையாது. கடல் நீரோட்டங்கள்தான் இதை செய்கின்றன. இந்த கடல் நீரோட்டங்கள் வெப்பத்தை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்து செல்கிறது. ஒரு கன்வேயர் பெல்ட் போல இது செயல்படுகிறது. இவ்வளவு முக்கியமான கடல் நீரோட்டங்கள் மீது, இந்திய பெருங்கடலில் உப்பு குறையும் விஷயம் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
நன்னீர் கடலில் அதிக அளவில் உருவானால் நல்லதுதானே! குடிக்க இதையே பயன்படுத்தலாமே என்று கேட்க தோன்றலாம். ஆனால் இது நல்லது கிடையாது. நன்னீர் அடர்த்தி குறைவாக இருக்கும். எனவே கடலில் அடர்த்தி அதிகமாக உள்ள உப்பு நீர் அடியில் தேங்கிவிடும். இதனால் சத்துக்கள் மேலே வராது. இப்படி வரவில்லையெனில், பிளாங்டன் போன்ற உயிர்கள் அழியும். இது மொத்த உணவு சங்கிலியையும் பாதிக்கும். மறுபுறம் சூரிய வெப்பம் கடலுக்கு அடியில் செல்லாமல் மேலேயே தங்கிவிடும். இது சக்தி வாய்ந்த சூறாவளியை உருவாக்கும். தற்போது டிசம்பர் மாதம் பெய்யும் மழையையே நம்மால் தாங்க முடியவில்லை. இப்படி இருக்கையில், சூறாவளி எல்லாம் வந்தால் தமிழகத்திற்கு ரொம்ப கஷ்டமாகிவிடும். இந்த சூறாவளிகள் சில இடங்களில் அதிக மழைப்பொழிவையும், சில இடங்களில் வறட்சியையும் ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.