Friday, 19 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

பிரிட்டன் ராணுவ தளத்தை குறிவைத்து தாக்குதல்!

மத்திய கிழக்கில் அமெரிக்கா மட்டுமல்ல, பிரிட்டனும் ராணுவ தளத்தை வைத்திருக்கிறது. அதில் முக்கியமானதுதான் சைப்ரஸ் நாட்டில் உள்ள பிரிட்டனின் ராயல் ஏர் ஃபோர்ஸ் தளம்.இதன் மீது ஈரான் தற்போது தாக்குதல் நடத்தியிருக்கிறது.

தெற்கு சைப்ரஸில் உள்ள பிரிட்டனின் ராயல் ஏர் ஃபோர்ஸ் அக்ரோட்டிரி விமானப்படைத் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு ஈரான் ட்ரோன் விழுந்து நொறுங்கியதாக சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடோலிடிஸ் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. விமானப்படைத் தளத்திற்கும் மிகக் குறைந்த சேதமே உண்டானது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகமும் இந்தச் செய்தியை உறுதிப்படுத்தியதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தளத்தில் வசிக்கும் ராணுவ வீரர்களின் குடும்பத்தினரை வேறு இடங்களுக்கு மாற்றப் போவதாகவும் தெரிவித்தது.

இன்று, பாதுகாப்பு குறித்த அச்சங்கள் மேலும் தீவிரமடைந்தன. அக்ரோட்டிரி பகுதியில் மீண்டும் சைரன்கள் ஒலித்தன. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர, பிரிட்டன் போர் விமானங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கின்றன. அங்குள்ள ஊழியர்களுக்கு தொடர்ச்சியான பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அவர்களை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பிரிட்டன் ராணுவம் அறிவுத்தியுள்ளது.

பிரிட்டன் தனது ராணுவ வீரர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கையில், "ஜன்னல்களில் இருந்து விலகி நில்லுங்கள். பதுங்கு குழிகளில் பாதுகாப்பாக இருங்கள். அடுத்த அறிவுறுத்தலுக்காகக் காத்திருங்கள்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ராயல் ஏர் ஃபோர்ஸ் அக்ரோட்டிரியை நோக்கி வந்த மேலும் இரண்டு ட்ரோன்கள், விமானப்படைத் தளத்தை வந்தடைவதற்கு முன்பே வழிமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக சைப்ரஸ் அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இதற்கிடையில், பாஃபோஸ் சர்வதேச விமான நிலைய வான்வெளியில் சந்தேகத்திற்கிடமான ட்ரோன் ஒன்று கண்டறியப்பட்டதால் எச்சரிக்கை ஒலித்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்த ட்ரோன் பிரிட்டிஷ் தளத்தின் மீதான தாக்குதலுடன் தொடர்புடையதா என்பதை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

முன்னதாக அமெரிக்காவுடன் நாங்கள் ஈரானுக்கு எதிராக நிற்கிறோம் என்று பிரிட்டன் கூறியிருந்தது. இதனையடுத்துதான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.