Friday, 19 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

அகழ்வாராய்ச்சிக்கு ஒப்புதல் வழங்க பாஜக அரசு அஞ்சுகிறது? :முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “தமிழ் நாகரிகத்தின் தொன்மை என்பது இந்தியாவுக்கு ஊறு விளைவிப்பதல்ல; இந்தியாவின் நாகரிகப் பண்பாட்டுக்குப் பெருமை சேர்ப்பது. எதைக் கண்டு பாஜக அரசு அஞ்சுகிறது? அகழ்வாராய்ச்சிக்கு ஒப்புதல் வழங்குங்கள். கீழடி பேசட்டும், வரலாறு மேலெழட்டும்!” என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “கீழடி, ஆதிச்சனூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள ஒன்றிய பாஜக அரசிடம் உடனடி ஒப்புதல் வேண்டித் தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பி 8 மாதங்கள் ஆகின்றன.

இதற்கான முன்மொழிவுகள் ஜூலை 2025-ல் அனுப்பப்பட்டு, நவம்பரில் இந்திய தொல்லியல் துறையின் தலைவர் தலைமையிலான கூட்டத்திலும் அது எடுத்துக்கொள்ளப்பட்டது. இருந்தும், 8 மாதங்களாகியும் ஒப்புதல் கிடைக்கவில்லை. மீண்டும், மீண்டும் நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். மீண்டும், மீண்டும் அது கண்டுகொள்ளப்படாமல் இருக்கிறது.

தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சியை மேற்கொள்வதற்கு உகந்த காலம் என்பது ஜனவரி முதல் ஜுலை வரைதான். இதைத் தவறவிட்டால், பருவமழையினால் களப்பணிகள் தடைபடும், முக்கிய ஆராய்ச்சிகள் தாமதமாகும், 2025-2026-ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியும் வீணாகும்.

நான் கேட்க விரும்புவது… ஏன் இந்தத் தயக்கம்? தமிழ் நாகரிகத்தின் தொன்மை என்பது இந்தியாவுக்கு ஊறு விளைவிப்பதல்ல; இந்தியாவின் நாகரிகப் பண்பாட்டுக்குப் பெருமை சேர்ப்பது. எதைக் கண்டு பாஜக அரசு அஞ்சுகிறது? அகழ்வாராய்ச்சிக்கு ஒப்புதல் வழங்குங்கள், வரலாறு பேசட்டும்!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.