மும்பை : மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 2-ல், இந்தியாவின் முதல் 'இன்-டெர்மினல்' விரைவு வணிக சேவையை Blinkit நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் மற்றும் பிளிங்கிட் இடையிலான இந்த ஒப்பந்தத்தின் மூலம், பயணிகள் இனி விமான நிலையத்தின் உள்ளேயே அத்தியாவசிய பொருட்களை மொபைல் செயலி வழியாக ஆர்டர் செய்யலாம்.
பயணிகள் போர்டிங் கேட், லவுஞ்ச் அல்லது உணவக பகுதிகளில் இருந்தபடியே பயண சாதனங்கள், எலக்ட்ரானிக்ஸ், தின்பண்டங்கள் மற்றும் மருந்துகளை ஆர்டர் செய்து தங்களின் இருப்பிடத்திற்கே வரவழைக்க முடியும். பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு அங்கீகரிக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே விநியோகிக்கப்படும்.
இந்த தனித்துவமான சேவை பயணிகளுக்கு பெரும் வசதியை ஏற்படுத்துவதோடு, இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது.
பிளிங்கிட் நிறுவனத்தின் இந்த அதிரடி அறிவிப்பை தொடர்ந்து அதன் தாய் நிறுவனமான எடர்னல் பங்குகள் பங்குச்சந்தையில் 3.34 சதவீதம் உயர்ந்து வர்த்தகமானது. மும்பை விமான நிலையத்தின் நவீனமயமாக்கல் மற்றும் பயணிகளின் வசதிக்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.