Friday, 19 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

அதிமுக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும்- பழனிசாமி பேச்சு

மேட்டூர்: "அதிமுக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும். அதிமுக அதிக இடங்களில் பெரும்பான்மையாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்" என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாநிலம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தை கொண்டு வருகிறார் . இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி இன்று எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு எதிரே எடப்பாடி தொகுதி தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார்.

பின்னர், அங்கிருந்து வேட்புமனு தாக்கல் செய்ய வட்டாட்சியர் அலுவலகத்துக்குச் சென்ற அவருக்கு பொதுமக்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து, எடப்பாடி சட்டப்பேரவை தொகுதியில் 8-வது முறையாக போட்டியிட இன்று தேர்தல் நடத்தும் அலுவலரான நடராஜனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் உறுதி மொழியையும் அவர் ஏற்றுக்கொண்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ? “அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தேமுதிகவுக்கு அரை சதவீதம்தான் வாக்கு வங்கி உள்ளது. தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் சீட் வழங்குவதாக சொன்னேன். அதற்குள் அவர்கள் அணி மாறி விட்டார்கள்.

உதயநிதி ஸ்டாலின் சிபிஎஸ்இ பள்ளி நடத்தி வருகிறார். அதில் மும்மொழி பாடமும் நடத்தப்படுகிறது. தங்களுக்கு தேவை என்றால் மட்டும் எந்த மொழியை வேண்டுமானாலும் அனுமதிப்பார்கள்.

தமிழகத்தில் நடைபெறுவது சட்டப்பேரவை தேர்தல். மக்களவை தேர்தல் அல்ல என முதல்வர் புரிந்துகொண்டு பேச வேண்டும்.

ஒன்று, இரண்டு திட்டங்கள் விடுபட்டிருந்தால் மீண்டும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைந்தவுடன் விடுபட்ட அனைத்தும் நிறைவேற்றி தரப்படும்.

15-ம் தேதி கன்னியாகுமரியில் பிரதமர் பங்கேற்கும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நானும் பங்கு பெறுகிறேன். ஆளுநரிடம் கொடுக்கப்பட்ட ஊழல் பட்டியலை விட, அமலாக்கத் துறை ஆதாரத்துடன் டிஜிபிக்கு அனுப்பிய ஊழல் புகார் குறித்து வழக்குப் பதிவு செய்யாமல் இருந்தனர். அதிமுக சார்பில் நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற்றும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. அதிமுக ஆட்சி அமைந்தவுடன் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக ஆட்சியில்தான் சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது.

தமிழகத்தில் அதிமுக பல்வேறு திட்டங்களை தந்த கட்சி. தற்போது மிகப் பெரிய வலிமையான எதிர்க்கட்சியாக உள்ளது.

ஆ.ராசா தொடர்பாக வெளியான ஆடியோ இந்திய அளவில் வைரலாகியது. கருணாநிதி உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது வீட்டு சிறையில் வைக்கப்பட்டதாகவும், பட்டியல் இன மக்களிடம் பாகுபாடு பார்க்கப்பட்டதாகவும் ஆடியோவில் பேசப்பட்டிருந்தது. அது குறித்துதான் நான் கருத்து கூறினேன். ராசா மீது நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு என் மீது பாய்வதில் என்ன இருக்கிறது?

அதிமுக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும். அதிமுக அதிக இடங்களில் பெரும்பான்மையாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்” என்றார்.

8-வது முறையாக போட்டி: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 1989-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், 1991, 2011,2016, 2021 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்றார். 1996, 2006 ஆகிய சட்டப்பேரவை தேர்தல்களில் தோல்வி அடைந்தார். தற்போது, 8-வது முறையாக மீண்டும் எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார்.