Friday, 19 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

பழனிசாமிக்கு எப்போதுமே என் நினைவு தான்-உதயநிதி பேச்சு

கும்பகோணம்: “பழனிசாமிக்கு எப்போதுமே எனது நினைவு தான். நான் என்ன செய்கிறேன், என்ன பேசுகிறேன் என பார்த்துக் கொண்டிருப்பார்” என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் தொகுதி திமுக வேட்பாளர் சாக்கோட்டை க.அன்பழகனுக்கு வாக்கு கேட்டு உதயநிதி ஸ்டாலின் பேசியது: “சாக்கோட்டை க.அன்பழகனை கடந்த 3 தேர்தலில் வெற்றி பெற வைத்த நீங்கள், 4-வது முறையாக போட்டியிடும் அவரை 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறவைத்து சட்டப்பேரவைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


நடைபெற உள்ள தேர்தலில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். வேட்பாளராக போட்டியிடும் சாக்கோட்டை க.அன்பழகன், கடந்த 5 ஆண்டில் பல கோடி மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இதேபோல் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் அத்தியூர், கொந்தகை பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும், திருநாகேஸ்வரத்தில் கழிவு நீர் செல்லும் வகையில் வாய்க்கால் கட்டி தரவேண்டும், வீடு இல்லா ஏழைகளுக்கு சேஷம்பாடியில் வீடு கட்டித்தர வேண்டும், டாக்டர் மூர்த்தி சாலையில், அரசு ஊழியர்களுக்கு வீட்டு வசதி வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டித் தரவேண்டும்.

மாநகராட்சியில் காவல் ஆணையர் அலுவலகம் கட்ட வேண்டும், 3-வது கட்ட புறவழிசுற்றுச்சாலை அமைக்க வேண்டும், கும்பகோணத்தில் நெல் சேமிப்பு கிடங்கு, அதிநவீன உலர் களங்கள் அமைக்க வேண்டும், மாவட்ட அரசு மருத்துவமனைக்கு புதியதாக எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி செய்து தரவேண்டும்.

கும்பகோணத்தை மையமாக கொண்டு தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைக்க வேண்டும், தாராசுரத்தில் புதை வட சாக்கடை வசதி செய்து தரவேண்டும், 2028-ல் நடைபெறும் மாசி மகா மக விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். இந்த கோரிக்கைகள் அனைத்தும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, ஆட்சி பொறுப்பேற்றவுடன், கோரிக்கைகள் முழுவதும் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளிக்கிறேன்.

இதேபோல் ஏழை, எளிய மாணவர்கள் உயர் கல்வி படிக்கும் வாய்ப்பை உருவாக்குவதற்கு நிச்சயம் கும்பகோணம் கருணாநிதி பல்கலைக்கழகம் திராவிட மாடல் ஆட்சி அமைக்கப்படும்.

மேலும், கடந்த 2021-ல் அறிவித்த தேர்தல் அறிக்கைகளை நிறைவேற்றி உள்ளோம். தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதால், இந்தியாவிலேயே நம்பர் 1 மாநிலமாக திகழ்கிறது.

பழனிசாமிக்கு எப்போதுமே எனது நினைவு தான். நான் என்ன செய்கிறேன், என்ன பேசுகிறேன் என பார்த்துக்கொண்டிருப்பார். அவர் அதிமுக பொதுச் செயலாளராக எப்பவும் இருக்க வேண்டும், அப்போது தான் நம் பணி சுலபமாக முடியும். எனவே, உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களித்து சாக்கோட்டை க.அன்பழகனை வெற்றி பெற செய்ய வேண்டும், அதற்காக வீடுகள் தோறும் நேரடியாக சென்று தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டும்” என்று அவர் கூறினார்.