Friday, 19 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

“டெல்லியிலிருந்து ரிமோட் மூலம் புதுச்சேரி இயக்கப்படுகிறது”-உதயநிதி ஸ்டாலின்

புதுச்சேரி: “அனைத்து விஷயத்திலும் ஆளுநர் தலையீட்டால் மக்களால் தேர்வான அரசுக்கு மதிப்பில்லாமல், புதுச்சேரி டெல்லியில் இருந்து ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்படுகிறது,” என தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

புதுவை மரப்பாலம் சந்திப்பு மற்றும் அண்ணா சாலை அருகே திமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி இன்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: புதுவை மக்கள் வெறுப்பு அரசியலுக்கு இடம் தர மாட்டார்கள். அப்படிப்பட்ட புதுவையில் பாசிச பாஜக சக்திகளின் ஊடுருவல் அதிகமாகிவிட்டது. மக்கள் விரோத திட்டங்களை சோதித்துப் பார்க்கும் இடமாக புதுவையை பாஜக மாற்றி வருகிறது. பாஜகவின் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்திவிட்டனர்.

குலக் கல்வி திட்டத்தை கொண்டுவந்துள்ளனர். இளம் தலைமுறை எதிர்காலத்தை கெடுக்கும் திட்டங்களை ஒவ்வொன்றாக புதுவையில் அமல்படுத்தி வருகின்றனர். பாஜகவின் எந்த சதி திட்டத்தையும் தமிழகத்தில் நுழைய விடாமல் ஸ்டாலின் தடுத்து வருகிறார். புதுவை மண் சுய மரியாதை மண் என்பதை இந்த முறை நிரூபித்துக் காட்ட வேண்டும்.

மாநில அரசும், மத்திய அரசும் ஒன்றாக கூட்டணியாக இருந்தால் வளர்ச்சி அதிகமாக இருக்கும். இரட்டை இன்ஜின் ஆட்சி என மோடி கூறுகிறார். டபுள் இன்ஜின் ஆட்சியால் புதுவைக்கு எதாவது வளர்ச்சி திட்டம் வந்துள்ளதா- உரிமைகள் கிடைத்துள்ளதா ? திராவிட இன்ஜின் என்ற சிங்கிள் இன்ஜின் மூலமாக இரட்டை இலக்க வளர்ச்சியை தமிழகத்தில் ஸ்டாலின் கொடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் அதிமுக தோளில் ஏறி நின்று பாஜக சவாரி செய்வது போல புதுவையில் என்ஆர்.காங்கிரஸ் தோளில் ஏறி நின்று பாஜக சவாரி செய்கிறது. புதுவை மக்கள் மீது மத்திய அரசுக்கு அக்கறை இருந்திருந்தால், மக்களின் கோரிக்கையான மாநில அந்தஸ்தை வழங்கினார்களா ? 16 முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் மாநில அந்தஸ்தை வழங்கவில்லை. மோடிக்கு செய்ய மனசில்லை.

புதுவையில் துணை நிலை ஆளுநர் கையில்தான் எல்லா அதிகாரமும் குவிந்துள்ளது. மாநில அந்தஸ்து கிடைத்தால் ஆளுநருக்கு அதிகாரம் இல்லாமல் போய்விடும். ஆளுநரை வைத்தே புதுவையை ஆளலாம் என பாஜக நினைக்கிறது.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி வெளி நடப்பு செய்து பார்த்திருப்பீர்கள், ஆனால் தமிழ்நாட்டில்தான் முதன்முறையாக ஆளுநரே வெளிநடப்பு செய்தார். புதுவையில் அனைத்து விஷயத்திலும் ஆளுநரின் தலையீடு உள்ளது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு மதிப்பில்லை. மத்திய அரசு நியமிக்கும் ஆளுநர்கள் தான் அனைத்தையும் தீர்மானிக்கின்றனர். புதுவையை டெல்லியில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்குகின்றனர்.

தேசிய ஜனநாயக கூட்டணி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. பொதுப்பணித் துறையில் ஊழல், லேப் டாப் ஊழல், ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் ஊழல் நடந்துள்ளது. எல்லா துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை விரட்டியடிக்கப்போவது போல புதுவையிலும் அந்த கூட்டணியை விரட்டியடிக்கும் நேரம் தான் இந்த தேர்தல்” என்றார் உதயநிதி ஸ்டாலின். இப்பிரச்சாரத்தின் போது திமுக மாநில அமைப்பாளர் சிவா, வேட்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.