சென்னை: “பழனிசாமி அல்ல; அவருக்கு படியளக்கும் ஆர்.எஸ்.எஸ் சாமிகளானாலும் அவர்கள் விடும் சாபங்களெல்லாம் எங்களை ஒன்றும் செய்யாது. ஸ்டாலின் கொண்டு வந்திருக்கும் திட்டங்களை, மண்ணில் புதைக்கும் துணிச்சல், ஒருவருக்கும் வராது. இந்தத் திட்டங்கள் இருக்கும் வரை, இந்த ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்” என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.09) மறைமலைநகரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை: “தி.மு.க. என்றால், வளர்ச்சி. தி.மு.க.வின் வளர்ச்சித் திட்டங்களைத் தெரிந்து கொள்ள தலைநகர் சென்னையையும், சுற்றியிருக்கும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளையும் சுற்றி வந்தாலே நன்றாத் தெரிந்துவிடும். ஒரு மினி டூர் போன்று, பல திட்டங்களை பார்க்கலாம். மகேந்திரா, விப்ரோ, பிஎம்டபிள்யூ, சாம்சங் என்று ஏராளமான நிறுவனங்கள் இங்கு இருக்கிறது. லிஸ்ட் போட்டுச் சொன்னால், ஒரு நாள் முழுவதும் கம்பெனிகளின் பெயரை மட்டுமே சொல்லிக் கொண்டு இருக்கலாம்.
இந்தத் தொழிற்சாலைகள் அனைத்தும் உருவானது எந்த ஆட்சியில்? நம்முடைய தி.மு.க. ஆட்சியில். பத்தாண்டு காலம் தமிழ்நாட்டை படுபாதாளத்தில் தள்ளிய அ.தி.மு.க. ஆட்சியை உங்கள் ஆதரவோடு அகற்றி, தமிழ்நாட்டுக்கு புதிய விடியலாக திராவிட மாடல் ஆட்சியை அமைத்தோம். 2021-இல் உங்கள் ஆதரவுடன் தமிழ்நாட்டை மீட்டெடுத்து, இன்றைக்கு, இந்தியாவில் ‘நம்பர் ஒன்’ மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தியிருக்கிறோம்.
இந்தியாவுக்கே வழிகாட்டும் மாடல், திராவிட மாடல்தான் என்று சொல்லும் அளவுக்கு, மாநிலத்தையே தலைநிமிர வைத்திருக்கிறோம்! இந்த வளர்ச்சியை சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதிலும் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் பழனிசாமி, அவதூறுகளை மட்டுமே பேசிக் கொண்டிருக்கும் அவர், இப்போது திடீரென்று என்னுடைய மரணத்தை விரும்பி பேசியிருக்கிறார்.
மாதந்தோறும் உரிமைத்தொகை கொடுத்து, ஒரு கோடியே 31 இலட்சம் மகளிருக்கு துணை நிற்கும் நான், இல்லாமல் போக வேண்டுமாம். முதல் நாள் - முதல் கையெழுத்துப் போட்டு, மகளிர் அனைவரும் கட்டணமில்லாமல் விடியல் பயணம் செய்யலாம் என்று உத்தரவிட்ட இந்தக் கை, மண்ணுக்குள் போக வேண்டுமாம். தமிழ்நாட்டுக் குழந்தைகள் அனைவரும் நன்றாகப் படித்து முன்னேற வேண்டும் என்று, காலை உணவு – புதுமைப்பெண் – தமிழ்ப்புதல்வன் இதுபோன்ற திட்டங்களை நிறைவேற்றி, அவர்களின் வெற்றியை மனதார கொண்டாடும் நான், கரோனாவில் போயிருக்க வேண்டுமாம். யாருடைய ஆசை? பழனிசாமியின் ஆசை.
ஏழை-எளிய மக்கள் உடல்நலத்துடன் இருக்க வேண்டும் என்று, “மக்களைத் தேடி மருத்துவம்”, “இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48”, “நலம் காக்கும் ஸ்டாலின்”, “இதயம் காப்போம் திட்டம்”, “கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை” – இதுமாதிரியான திட்டங்களை செயல்படுத்தும் இந்த ஸ்டாலின், இல்லாமல் போக வேண்டுமாம்.
பழனிசாமி அவர்களே... இந்த உலகத்தில் மரணத்தைச் சந்திக்காத எந்த மனிதரும் இல்லை! யாராக இருந்தாலும் மரணம் ஒருநாள் நிச்சயம் வந்தே தீரும். இந்த ஸ்டாலினுக்கும் மரணம் வரும். மண்ணில் புதைப்பார்கள். ஆனால், சவால் விட்டுச் சொல்கிறேன். இந்த ஸ்டாலின் கொண்டு வந்திருக்கும் திட்டங்களை, மண்ணில் புதைக்கும் துணிச்சல், ஒருவருக்கும் வராது! அதுதான் உண்மை. இந்தத் திட்டங்கள் இருக்கும் வரை, இந்த ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்.
இன்னும் சொல்கிறேன்... 1971-இல் திராவிட முன்னேற்றக் கழக கொங்கு மண்டல மாணவரணி மாநாடு நடந்தது. அப்போது எனக்கு வயது 18. அந்த மாநாட்டில் நான் கலந்து கொண்டேன். மறைந்த நெஞ்சில் வாழக்கூடிய மொழிப்போர் தளபதி எல்.ஜிதான் மாநாட்டுத் தலைவர். அப்போதுதான் முதன்முதலில் பேசுகிறேன். அவரிடம் அனுமதி வாங்கி, இரண்டு நிமிடம் மாநாட்டில் பேச எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது நான் என்ன பேசினேன் தெரியுமா? இன்றைக்கும் முரசொலி பத்திரிகை மற்றும் பல்வேறு பத்திரிகைகளில் இருக்கிறது.
“மொழிக்காக – நம்முடைய இனத்திற்காக போராடுகிறோம்! போராடும் இந்த நேரத்தில் நம்முடைய உயிரை இழக்கும் தியாகத்தைச் செய்வதற்குக்கூட காத்திருக்கிறோம். (என்னுடைய தந்தை கருணாநிதி மேடையில் உட்கார்ந்திருக்கிறார்) என்னுடைய தந்தைக்கு, நான்கு ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள். அந்த நான்கு ஆண் பிள்ளைகளில், ஒரு ஆண் பிள்ளை போய்விட்டாலும், என்னுடைய தந்தை நிச்சயம் கவலைப்பட மாட்டார். காரணம், மொழிக்காக – இனத்துக்காக தனயனை இழந்த தந்தை என்று, என்னுடைய தந்தைக்கு பாராட்டு கிடைக்கும்” என்று நான் பேசினேன். அப்படிப் பேசியவன்தான் உங்கள் முன்னால் நிற்கும் ஸ்டாலின். இதெல்லாம் அரசியல் அழுக்காக இருக்கும் பழனிசாமிக்கு தெரியுமா?
பழனிசாமி இவ்வளவும் பேசிவிட்டு, இன்றைக்கு காலையில், என்ன சொல்கிறார் தெரியுமா?. “நான் அவ்வாறு பேசவே இல்லை; கரோனா காலத்தில் ஸ்டாலின் காணாமல் போனார்” என்றுதான் சொன்னேன் என்று பல்டி அடித்து, அடுத்த பொய்யை பேசியிருக்கிறார். பழனிசாமி அவர்களே... ஆட்சியில் இருந்தாலும் - இல்லாவிட்டாலும் எப்போதும் களத்தில் நிற்கக்கூடியவன்தான் தி.மு.க.காரன். தி.மு.க. அரசு கரோனா காலத்தையும் எப்படி கையாண்டது என்பது உங்களுக்குத் தெரியும்… அ.தி.மு.க. அரசு கரோனா காலத்தை கொள்ளையடிப்பதற்குரிய வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், பாசிச பா.ஜ.க.வும் - அடிமை அ.தி.மு.க.வும், வேரோடும் - வேரடி மண்ணோடும் வீழ்த்தப்படப் போவது நிச்சயம்! உறுதி, உறுதி. நான் தமிழ்நாட்டு மக்களுக்கு சொல்வதெல்லாம், டபுள் எஞ்சின் - டப்பா எஞ்சின் என்று வருவது எதற்காக? உரிமைத்தொகையை நிறுத்துவதற்காக! விடியல் பயணத்தை முடக்குவதற்காக! புதுமைப்பெண் - தமிழ்ப்புதல்வன் போன்ற திட்டங்களை தடுப்பதற்காக! இடஒதுக்கீட்டு உரிமையைப் பறித்து சமூகநீதியைப் படுகுழியில் தள்ளுவதற்காக. இது எதையுமே, நான் கற்பனையாக சொல்லவில்லை! பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் இப்படித்தான் செய்திருக்கிறார்கள்.
இவர்களுக்கு அளிக்கும் வாக்கு என்பது, தமிழ்நாட்டை முன்னேற்றுவதற்கு போடப்படும் தடைக்கற்கள்! இதை, மக்கள் உணர வேண்டும்! 0.07 வளர்ச்சி என்ற அவல நிலையில் அ.தி.மு.க. விட்டுச் சென்ற தமிழ்நாட்டை, உங்கள் ஆதரவுடன் மீட்டு, “11.19 விழுக்காடு வளர்ச்சி! இந்தியாவிலேயே டபுள் டிஜிட் வளர்ச்சி! சூப்பர்ஸ்டார் ஸ்டேட்!” என்ற நிலைக்கு உயர்த்தியிருக்கிறோம்! அதனால்தான், ஏராளமான தொழிற்சாலைகள் தமிழ்நாட்டை நோக்கி மீண்டும் வருகிறார்கள்” என்று அவர் பேசினார்.