காரைக்குடி: காரைக்குடியில் நேரம் அதிகமானதால் பேசாமல் கையசைத்தபடி தவெக தலைவர் விஜய் சென்றதால், அக்கட்சி தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர். மேலும், சிறிது தூரம் தொண்டர்கள் மத்தியில் விஜய் சைக்கிள் ஓட்டினார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் முத்துராமலிங்க தேவர் சிலை அருகே இன்று காலை 12 மணி முதல் 2.30 மணி வரை தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்ய தேர்தல் நடத்தும் அலுவலர் அனுமதி கொடுத்திருந்தார். மேலும், காவல் துறை சார்பில் 37 நிபந்தனைகளும் விதிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், மதுரையிலிருந்து காலை 10.30 மணிக்கு விஜய் வேனில் புறப்பட்டார். அவருக்கு சிவகங்கை மாவட்டத்தில் எஸ்.எஸ்.கோட்டை, திருப்பத்தூர், தம்பிபட்டி, பிள்ளையார்பட்டி, பாதரக்குடி, காரைக்குடி புறவழிச்சாலை, கழனிவாசல், வாட்டர் டேங்க், வருமானவரித் துறை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.
அவர் முத்துராமலிங்கத் தேவர் சிலையை பார்த்து கும்பிட்டார். தொடர்ந்து அவருக்கு வேட்பாளர் பிரபு கற்பகவிநாயகர் படத்தை கொடுத்தார். மேலும் நேரம் அதிகமானதால் பேசாமல் சிலையை சுற்றி வந்து, தொண்டர்களை பார்த்து கையசைத்தப்படி சென்றார். இதனால் காலை 9 மணியிலிருந்து வெயிலில் பல மணி நேரம் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர்.