Friday, 19 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

சஞ்சு சாம்சன் அதிரடி சதம்!

சென்னை: ஐபிஎல் 2026 தொடரின் 18-வது லீக் ஆட்டத்தில், டெல்லி கேபிடல்ஸ் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த சீசனின் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

சென்னை சேப்பாகத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் அக்சர் படேல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். சென்னை அணிக்குத் தொடக்க வீரர்களான கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் ஜோடி ஆட்டத்தைத் தொடங்கியது. இதில் ருதுராஜ் 18 பந்துகளில் 15 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இருப்பினும், மறுமுனையில் சஞ்சு சாம்சன் 56 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 115 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அவருக்குத் துணையாக ஆடிய ஆயுஷ் மத்ரே 59 ரன்கள் எடுத்து அணிக்கு வலுசேர்த்தார். இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது.

213 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய டெல்லி கேபிடல்ஸ் அணிக்குத் தொடக்கம் சிறப்பாக அமைந்தது. கே.எல். ராகுல் (18) மற்றும் பாதும் நிசங்கா (41) அதிரடியாகத் தொடங்கினர். ஆனால், ஜேமி ஓவர்டன் பந்துவீச்சில் வரிசையாக விக்கெட்டுகள் விழத் தொடங்கின.

திரிஸ்டன் ஸ்டப்ஸ் 38 பந்துகளில் 60 ரன்கள் குவித்து அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு செல்லப் போராடினார். இருப்பினும், மற்ற வீரர்கள் அவருக்கு ஈடுகொடுக்கத் தவறியதால், டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. சென்னை தரப்பில் ஜேமி ஓவர்டன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 புள்ளிகளைப் பெற்றுள்ளது. டெல்லி அணிக்கு இது இரண்டாவது தோல்வியாகும். சதமடித்து அசத்திய சஞ்சு சாம்சன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.