Tuesday, 01 September 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது ஆர்சிபி!

பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சீசனின் 23-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 5 விக்கெட்டுகளில் வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் ஆர்சிபி அணி முதலிடத்துக்கு முன்னேறியது.

பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்து வீசியது. லக்னோ அணி 20 ஓவர்களில் 146 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணிக்காக மிட்செல் மார்ஷ் 40, ஆயுஷ் படோனி 38, முகுல் சவுத்ரி 39 ரன்கள் சேர்த்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஆர்சிபி சார்பில் ராஷிக் சலாம் 4, புவனேஸ்வர் 3, க்ருனல் பாண்டியா 2 மற்றும் ஹேசில்வுட் 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர். இதில் 4 ஓவர்களில் வெறும் 20 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார் ஹேசில்வுட் என்பது குறிப்பிடத்தக்கது. 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆர்சிபி விரட்டியது.

ஆர்சிபி அணி இலக்கை விரைந்து எட்டுவதில் தொடக்கம் முதலே மும்முரமாக இருந்தது. கோலி 49, கேப்டன் ரஜத் பட்டிதார் 27, ஜிதேஷ் சர்மா 23 ரன்கள் எடுத்தனர். 15.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து ஆர்சிபி வெற்றி பெற்றது. டிம் டேவிட் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் தலா 14 ரன்கள் எடுத்து களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்களில் 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளை கொண்டுள்ள ஆர்சிபி ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. ஆட்ட நாயகன் விருதை ஹேசில்வுட் வென்றார்.