இந்தி திரைப்பட இயக்குநர் நிதேஷ் திவாரி, ராமாயணக் கதையை படமாக்கி இருக்கிறார். இதில் ரன்பீர் கபூர் ராமராகவும் சாய் பல்லவி சீதையாகவும் ராவணனாக யாஷும் நடித்துள்ளனர். மேலும் அனுமனாக சன்னி தியோல், லட்சுமணனாக ரவி துபே என பலர் நடித்துள்ளனர்.இந்நிலையில் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி அமெரிக்காவில் நடைபெறும் `சினிமாகான் 26' விழாவில் நடைபெற்றது.அதில் கலந்துகொண்ட நடிகர் யாஷ் ‘ராமாயணம்’ படம் பற்றி கூறும்போது, “இப்படத்தின் முதல் பாகத்தில் ராமராக நடிக்கும் ரன்பீர் கபூருக்கும், ராவணனாக நடிக்கும் எனக்கும் காட்சிகள் இருக்காது. இது 2 பாகங்களாக உருவாகும் படம் என்பதால், முதல் பாகத்தில் ராவணனாக எனக்கு ஒரு தனி ராஜ்ஜியமும், ராமருக்குத் தனி ராஜ்ஜியமும் உள்ளது.
ரன்பீர் கபூர் மிகச் சிறந்த நடிகர். இருவரின் நேரடி மோதல் 2-ம் பாகத்தில் மட்டுமே இடம்பெறும். ‘ராமாயணம்’ போன்ற லட்சியமான மற்றும் அசாதாரணமான ஒன்றைச் செய்ய முற்படும்போது, எங்கள் அனைவருக்கும் ஒரே குறிக்கோள்தான், அது எங்களால் முடிந்த சிறந்ததைக் கொடுப்பது.
இந்தப் படம் நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான ஒரு கதை மட்டுமல்ல. நாம் இந்தக் கதைகளைக் கேட்டு வளர்ந்தவர்கள். இது நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதி. ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஒரு நியாயம் இருக்கும். தான் செய்வதைச் சரி என்று நம்பும் பலமிக்க ஆளுமையாக ராவணன் சித்தரிக்கப்பட்டுள்ளார்” என்றார்.