Friday, 19 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

இரண்டு நாள் பயணமாக இலங்கை செல்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக நாளை (ஏப்.19) இலங்கை செல்கிறார்.

இது தொடர்பாக குடியரசுத் துணைத் தலைவர் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக நாளை (ஏப். 19) இலங்கை செல்கிறார். குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் இருதரப்பு அரசுமுறைப் பயணம் இதுவாகும்.

ஏப்.19 அன்று பிற்பகலில், கொழும்பில் நடைபெறும் ஒரு சமூக நிகழ்வில், இந்திய வீட்டு வசதித் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசின் உதவியுடன் கட்டப்பட்ட வீடுகளை, தமிழ் சமூகங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு குடியரசுத் துணைத் தலைவர் காணொலி வாயிலாக வழங்குகிறார்.இதன் மூலம், தமிழ் சமூகங்களுக்கான மொத்த வீடுகளின் எண்ணிக்கை 50,000-ஐ எட்டும். மேலும் இத்திட்டத்தின் நான்காம் கட்டத்தில் கூடுதலாக 10,000 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

ஏப். 20 அன்று, குடியரசுத் துணைத் தலைவர் நுவரெலியாவிற்குப் பயணம் மேற்கொண்டு, இந்திய வீட்டுவசதித் திட்டங்களைப் பார்வையிட்டு, உள்ளூர் தமிழ் சமூகத்தினருடன் கலந்துரையாடுகிறார்.

இரு நாடுகளுக்கும் இடையே சமீபத்தில் நடைபெற்ற உயர்மட்ட சந்திப்புகளைத் தொடர்ந்து நடைபெறும் இந்தப் பயணம், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான நாகரிக மற்றும் மக்கள் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.