Monday, 15 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

இந்திய அரசியல் களத்தில் இடதுசாரிகள் இனி..? - கேரளா எழுதிய முன்னுரையும் முடிவுரையும்

உலகளவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அதிகாரம் கிடைத்தது என்றால், அது இந்தியாவில் கேரள மாநிலத்தில்தான். 1957-ல் அது நடந்தது. அதன் பின்னர் இந்தியா முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சி எழுச்சி காண்பதும், தேய்வதுமாக இருந்தது.

இருந்தாலும், 1977-க்குப் பின் இந்தியாவில் எங்கேனும் ஒரு மாநிலத்திலாவது கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்து வந்தது. ஆனால் 50 ஆண்டுகளில் முதன்முறையாக இப்போது நாடெங்கிலும் ஓரிடத்தில் கூட கம்யூனிஸ்ட் ஆட்சி இல்லை என்ற நிலைமை உருவாகியுள்ளது.

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான எல்டிஎஃப் ஆட்சியை இழந்ததோடு கேரளாவில் தொடங்கிய கம்யூனிஸ்ட் ஆட்சி சகாப்தம் அங்கேயே இப்போதைக்கு முடிந்துள்ளது. நிச்சயமாக இது நிரந்தரமானது என்று சொல்லிவிட முடியாது, இருந்தாலும் 50 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமை விவாதிக்கப்பட வேண்டியதே. அது பற்றி ‘அல்ஜஸீரா’ தளத்தில் வெளியான அலசல் கட்டுரையின் சுருக்கமான வடிவம் இது...

அனல் பறக்கவிட்ட கம்யூனிஸ்டுகள்:

2007 ஆகஸ்டில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, அமெரிக்காவோடு அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தும் முனைப்பில் இருந்தது. ஆனால், அதற்கு இடதுசாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மக்களவையில் 62 சீட்டுகள் இடதுசாரிகள் வசம் இருந்ததால், அவர்களின் ஆதரவு மன்மோகன் சிங் ஆட்சிக்கு அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றினால் ஆட்சிக்கு ஆதரவை விலக்கிக் கொள்வோம் என்று மிரட்டும் அளவுக்கு இடதுசாரிகள் வசம் பலம் இருந்தது. அரசியலில் இடதுசாரிகளின் ஆதிக்கம் உச்சத்தில் இருந்த காலம் அது என்று கூறலாம்.

ஆனால், கேரள தேர்தல் முடிவுகள் வெளியான மே 4-ம் தேதி, அந்த ஆதிக்கம் அதன் அதல பாதாள வீழ்ச்சியை அடைந்த காலமாக வரலாற்றில் பொறித்துவிடலாம்.

கேரளாவும் கம்யூனிஸ்டுகளும்...

இடதுசாரி கொள்கைகளின், அரசியலின் கோட்டையாகவே கேரளா இருந்தது எனலாம். 1950-களில் கேரளாதான் இந்த உலகுக்கு முதல் கம்யூனிஸ்ட் அரசை நல்கியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அங்கு 1957 முதல் 1959 வரை ஆட்சியில் இருந்தது.

மேற்கு வங்கத்தில் 1997 முதல் 2011 வரை இடதுசாரிகள் ஆதிக்கம் செலுத்தினர். திரிணமூல் காங்கிரஸின் மம்தா பானர்ஜி அந்த நீண்ட இடதுசாரி ஆட்சிப் பாரம்பரியத்துக்கு முடிவுரை எழுதினார்.

திரிபுராவில் 1993 முதல் 2018 வரை இடதுசாரிகள் ஆட்சி நிலவியது. அங்கே பாஜக இடதுசாரிகள் கதையை முடித்தது.

இந்த வரிசையில்தான் கேரளாவில் இடதுசாரிகள் ஆட்சியை இப்போது காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் கூட்டணி முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது.

நம்பர் வீழ்ச்சி...

தொடர்ந்து சில ஆண்டுகளாகவே கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தல் அரசியலில் சோபிக்கவில்லை. 2024 மக்களவைத் தேர்தலில் கூட நாடு முழுவதும் போட்டியிட்டு 8 இடங்களில் மட்டுமே வாகை சூடியது. 2004 மக்களவைத் தேர்தலில் 62 இடங்களில் வெற்றியென இருந்த நிலை 2024-ல் தலைகீழாக மாறியிருந்தது எனலாம்.

தற்போதைய நிலவரப்படி மாநிலங்கள் அளவில் இடதுசாரிகள் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 40+ என்ற அளவில்தான் திணறிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இடதுசாரிகளின் அரசியல் வீச்சு குறித்து டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் பொலிட்டிக்கல் சயின்ஸ் துறை உதவிப் பேராசிரியர் ராஜஸ்ரீ குப்தா கூறுகையில், “இடதுசாரிகளின் தாக்கம் என்பது அரசியல் களத்தில் குறுகியது தான். அவர்கள் கேரளா, திரிபுரா, மேற்கு வங்கம் எனக் குறுகிய வட்டத்தில் தான் தேர்தல் அரசியலில் சக்தி வாய்ந்தவர்களாக இருந்திருக்கின்றனர்.

இந்தி மொழி பேசும் மாநிலங்களில் தொழிற்பேட்டைகளை சுற்றி மட்டுமே இடதுசாரிகள் ஆதிக்கம் செலுத்திவந்தனர். அதுவும் வர்த்தக சங்க அரசியல் வலுவிழந்ததோடு அவர்களின் ஆதிக்கமும் வலுவிழந்தது எனலாம்.

எனது பார்வையில் அவர்களின் வீச்சுக் குறைபாடு என்பது சாதி, பாலின பேதங்கள் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்வதில் நிலவும் சிக்கல்களும், தாராளமயமாக்கலுக்குப் பின்னர் மாறிவரும் முதலாளித்துவத்தின் தன்மையுமே காரணம் என்பேன்” என்று வெளிநாட்டு ஊடகப் பேட்டி ஒன்றில் கூறியிருப்பது இங்கே மேற்கோள்காட்டத்தக்கது.இது ஒருபுறம் இருக்க, இந்தியாவின் அரசியல் போக்கானது, இயல்பிலேயே வலதுசாரிகளுக்கு ஆதரவானது என்றும் அரசியல் நிபுணர்கள் கணிக்கின்றனர். மேலும், ஆட்சி அரசியலுக்காக இடதுசாரிகள் தங்கள் கொள்கைகளில் அவ்வப்போது சமரசம் செய்து கொண்டதும் இப்போதைய நிலைமைக்குக் காரணம் என்றும் கணிக்கின்றனர்.

1975-ல் கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட் ஆட்சி அமைத்து இஎம்எஸ் நம்பூதிரிபாட் முதல்வரானார். அவருடைய ஆட்சியில் கேரளாவில் நிலம், கல்வி சார்ந்து மிகப்பெரியளவில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. ஆனால், அவற்றுக்கு மத்தியில் ஆட்சியில் இருந்த பிரதமர் நேரு முட்டுக்கட்டை போட்டார். கேரளாவில் காங்கிரஸ் எதிர்க்கட்சியாகவும் இருந்தது. ஒரு சர்ச்சைக்குரிய சட்டம் மூலம் நம்பூதிரிபாட் அரசு தூக்கி எறியப்பட்டது.

1960 கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியிடம் இந்திய கம்யூனிஸ்ட் தோல்வி கண்டது. அதன் பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் பல பிரிவுகளாகப் பிரிந்து சிதறியது.

கேரளாவில் எல்டிஎஃப் ஆட்சியில் மாநிலத்தின் உட்கட்டமைப்புகள் மேம்பாடு சிறப்பாக இருந்தது. சமூக நலத்திட்டங்கள் சிறப்பாகவே இருந்தது. மாநிலத்தில் மாற்றுத் திறனாளி பெண்கள், கைம்பெண்கள் என 55 லட்சம் பேர் ரூ.8500 உதவித் தொகை பெற்று வந்தனர். கேரள அரசின் கரோனா கால செயல்பாடுகளும் வெகுவாகப் பாராட்டப்பட்டு வந்தது. 2021 தேர்தலில் அதனாலேயே பினராயி விஜயன் மீண்டும் முதல்வரானார்.

ஆனால், சமீப காலமாக எல்டிஎஃப் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியானதாகத் தெரிகிறது. அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிராக குரல் கொடுத்து வந்த கேரள அரசு அதே மொழியில் பேசுவதாக விமர்சனங்கள் எழுந்தன. அதன் தாக்கமாகவே பாரம்பரிய இடதுசாரிகள் வாக்காளர்கள் கூட எல்டிஎஃப் கூட்டணிக்கு எதிராக வாக்களித்துள்ளனர். இது ஒரு சரிப்படுத்தும் நடவடிக்கை என்று கூறுகின்றனர்.இது முடிவுரையா?

இன்றைய தேதியில் இந்தியாவில் எங்குமே இடதுசாரி ஆட்சி இல்லாத மாநிலம் என்ற சூழல் உருவாகியுள்ள நிலையில், இது முடிவுரை என்று சொல்லிவிட முடியாது இடதுசாரிகள் தங்களை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர்.

அதேபோல், இடதுசாரிகள் ஆட்சியில் இல்லாவிட்டாலும் எதிர்க்கட்சி தரப்பில் ஆதிக்கத்தை அதிகரித்தே வருகின்றனர்.

நாட்டில் ஏழை - பணக்காரர்கள் இடையேயான வித்தியாசம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நாட்டின் நிதிக் கொள்கைகள் எல்லாம் கார்ப்பரேட் மையமாக மாறி வருகிறது. இந்த நிலையில், அமைப்புசாரா தொழிலாளர் சமூகத்துக்காக செயல்பட்டு இந்த இடைவெளியை சரிசெய்வதில், இடதுசாரிகள் முக்கியப் பங்காற்ற முடியும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

உலகம் முழுவது சோஷலிஸ ஜனநாயக அரசியல் உயிர்த்தெழுவதற்கான சாத்தியக் கூறுகள் இன்னமும் இருப்பதால், அந்த வாய்ப்பு இந்தியாவில் மட்டும் இல்லாமல் போய்விடாது என்று சொல்லாம்.

அதேபோல், நாளுக்கு நாள் அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை மற்றும் சமத்துவின்மையைப் பற்றிப் பேச எந்தப் பிரதானக் கட்சிகளும் குரல் கொடுக்கத் தயாராக இல்லாத சூழலில் இடதுசாரிகள் எப்பவும் போல் அதனைப் பயன்படுத்தி மீண்டெழலாம். ஆனால், அதற்கு இடதுசாரிகள் 20-ம் நூற்றாண்டு கம்யூனிஸ்ட் வார்ப்பில் இருந்து விடுபட்டு, 21-ம் நூற்றாண்டின் இந்தியச் சூழலுக்குப் பொருத்தமான ஒரு சமூக ஜனநாயக சக்தியாக தங்களை வலுப்படுத்த வேண்டியிருக்கிறது என்று அரசியல் நிபுணர்கள் கணிக்கின்றனர்.