Monday, 15 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் நாளை பதவியேற்பு!

சென்னை: ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையுடன் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை, தவெக தலைவர் விஜய் இன்று (சனிக்கிழமை) மாலை சந்தித்ததை அடுத்து, ஆளுநர் அவரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பதும், நாளை மாலை 3.15 மணிக்கு சென்னை நேரு விளையாட்டு அரங்கில் விஜய் முதல்வராக பதவியேற்க இருப்பதும் உறுதியாகியுள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில், விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றதால் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. இதன் காரணமாக தவெகவின் எண்ணிக்கை 107 ஆக குறையும். ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்களின் எண்ணிக்கை தேவை எனும் நிலையில், காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவைக் கேட்டு விஜய் கடிதம் எழுதி இருந்தார்.

அதன் பேரில், முதல் கட்சியாக காங்கிரஸ் தனது ஆதரவை அறிவித்தது. காங்கிரஸ் கட்சிக்கு 5 எம்எல்ஏக்கள் உள்ளதால், தவெக தலைமையிலான கூட்டணியின் பலம் 112 ஆக அதிகரித்தது. இந்நிலையில், சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகள் நேற்று தங்கள் ஆதரவை அறிவித்தன. அந்த இரு கட்சிகளுக்கும் தலா 2 எம்எல்ஏக்கள் உள்ளதால், பலம் 116 ஆக உயர்ந்தது.

இதன் தொடர்ச்சியாக, இன்று மாலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் தங்கள் ஆதரவை அறிவித்தன. இவ்விரு கட்சிகளுக்கும் தலா 2 எம்எல்ஏக்கள் இருப்பதால் பலம் 120 ஆக அதிகரித்தது. இதன் காரணமாக தவெக பெரும்பான்மை பலத்தை பெற்றுள்ளது.

இதையடுத்து, ஆளுநரைச் சந்திக்க விஜய் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. இன்று இரவு 7.20 மணிக்கு விமானம் மூலம் கேரளா செல்ல திட்டமிட்டிருந்த ஆளுநர் அர்லேகர், விஜய் ஆட்சி அமைப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு தனது பயணத்தை ரத்து செய்தார். மேலும், மாலை 6.30 மணி அளவில் சந்திக்க விஜய்க்கு அவர் நேரம் ஒதுக்கினார்.

இதன் பின்னர், ஆளுநரை நேரில் சந்தித்த விஜய், பெரும்பான்மை பலம் இருப்பதற்கான கடிதங்களை நேரில் வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். விஜய் உடன் கூட்டணி கட்சித் தலைவர்களான காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம், சிபிஎம் மூத்த தலைவர் கே.பாலகிருஷ்ணன், சிபிஎம் எம்பி சு. வெங்கடேசன், விசிக எம்எல்ஏ வன்னி அரசு உள்ளிட்டோர் உடன் சென்றனர்.விஜய்க்கு பெரும்பான்மை பலம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்ட ஆளுநர், அவரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பதும், நாளை மாலை விஜய் பதவியேற்பதும் உறுதியானது. சென்னை நேரு விளையாட்டரங்கில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.

தாமதத்துக்கான காரணம் குறித்து ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் கூறியதாவது:

சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, அதன் அடிப்படையில் ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்தால் ஆளுநர் அப்போதே அதற்கு சம்மதம் தெரிவித்திருப்பார். விஜய்யும் உடனடியாக முதல்வர் பதவியை ஏற்றிருப்பார். ஆனால், கூட்டணி ஆட்சி அமைக்க இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்கள் ஆதரவு தங்களுக்கு இருப்பதாகவும் கூறி விஜய் தனது முதல் கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார்.

கூட்டணி ஆட்சி என கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததால், போதிய பெரும்பான்மை இல்லாதததை ஆளுநர் சுட்டிக்காட்டினார். போதிய பெரும்பான்மையுடன் வந்தால் உடனடியாக ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பதாகவும் அவர் கூறினார். பெரும்பான்மையை திரட்டுவதில் விஜய்க்கு ஏற்பட்ட தாமதம் காரணமாக, ஆளுநர் அழைப்பு விடுக்காமல் இருந்தார். இன்று பெரும்பான்மை கிடைத்ததை அடுத்து ஆளுநர் விஜய்க்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.