Sunday, 21 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

அறிவிக்கப்படாத மின்வெட்டை தடுத்திடுக: தவெக அரசுக்கு பாஜக, அமமுக வலியுறுத்தல்

சென்னை: தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் சாடியுள்ளனர்.

இது தொடர்பாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தின் தலைநகர் சென்னை உள்ளிட்ட பிற முக்கியப் பகுதிகளில் தொடர் மின்வெட்டு காரணமாக மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். கடந்த முறை தமிழகத்தை தவிக்க வைத்த திமுக அரசுக்கு ஈடு கொடுக்கும் வகையில், தற்போதைய தவெக அரசும் மக்களை இப்படி வதைப்பது கடும் கண்டனத்துக்குரியது.

கொளுத்தும் அக்னி வெயிலில் மின்சாரத்தைத் துண்டித்து குழந்தைகளையும், முதியவர்களையும் படாதபாடு படுத்துவது தான் தவெக அறிவித்த மாற்று அரசியலா? தமிழகத்தில் தடையற்ற மின்சாரம் கிடைக்க முதல்வர் விஜய், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் நிகழும் அறிவிக்கப்படாத பலமணி நேர திடீர் மின்வெட்டால், அனைத்து தரப்பு பொதுமக்களும் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

கோடைக் காலங்களில் அடிப்படைத் தேவைகளில் முதன்மையானதாக திகழும் மின்சாரம், அறிவிக்கப்படாமல் அடிக்கடி தடை செய்யப்படுவது பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை மட்டுமல்லாது, அவர்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. எனவே, தொடர் மின்வெட்டு பிரச்சினையை போக்க போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, இனி வரும் காலங்களிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டை முற்றிலுமாக தடுத்திட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.