Monday, 15 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

எபோலா பரவல்: பயணம் செய்யக்கூடாத நாடுகளின் பட்டியலை வெளியிட்டது மத்திய அரசு

புது டெல்லி: எபோலா வைரஸ் பரவலை சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்ததைத் தொடர்ந்து, எபோலாவால் பாதிக்கப்பட்ட காங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு இந்தியர்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "காங்கோ மற்றும் உகாண்டாவில் எபோலா நோய் பரவல் பதிவாகியுள்ளதன் அடிப்படையில், இதனை சர்வதேச பொது சுகாதார அவசரநிலை (PHEIC) என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், காங்கோ மற்றும் உகாண்டாவில் தற்போது பரவி வரும் எபோலா வைரஸ் நோயின் 'புண்டிபுகியோ' (Bundibugyo) வகைப் பரவலை, ஆப்ரிக்க கண்ட அளவிலான பொது சுகாதார அவசரநிலை (PHECS) என ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (Africa CDC) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

எனவே மறு அறிவிப்பு வரும் வரை, காங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு இந்திய அரசு அனைத்து இந்தியர்களுக்கும் அறிவுறுத்துகிறது. தற்போது இந்நாடுகளில் வசித்து வருபவர்கள் மற்றும் இந்நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்பவர்கள், உள்ளூர் அதிகாரிகளால் வெளியிடப்படும் பொது சுகாதார வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறும், கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.மே 21 நிலவரப்படி, காங்கோவில் 746 சந்தேகத்திற்குரிய எபோலா பாதிப்புகளும், அதில் 176 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. இதுவரை காங்கோ மற்றும் உகாண்டாவில் 85 பேருக்கு எபோலா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.