Monday, 15 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

காயம் காரணமாக கோலி விலகல்

மும்பை: ஆப்கானிஸ்தான் அணி உடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து காயம் காரணமாக இந்திய அணியின் பேட்ஸ்மேன் விராட் கோலி விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி வரும் சனிக்கிழமை (ஜூன் 6) நடைபெறுகிறது. அதன் பின்னர் மூன்று போட்டிகள் கொண்டு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இதில் ஒருநாள் கிரிக்கெட் அணியில் விராட் கோலி இடம்பெற்றிருந்தார்.

இந்நிலையில், அண்மையில் நிறைவடைந்த ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான சீசனில் ஆர்சிபி அணிக்காக கோலி விளையாடினார். அந்த அணி இந்த சீசனில் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி உடனான இறுதிப் போட்டியில் 42 பந்துகளில் 75 ரன்களை கோலி எடுத்தார். அதன் மூலம் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.

இந்தப் போட்டியில் அவரது வலது தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆப்கானிஸ்தான் உடனான தொடரில் இருந்து அவர் விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடைசியாக கடந்த ஜனவரி மாதம் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் கோலி விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே ரோஹித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் போட்டியில் விளையாடுவதற்கான மேட்ச் பிட்னஸை உறுதி செய்தால் மட்டுமே இந்த தொடரில் விளையாட முடியும். இத்தகைய சூழலில் இந்த தொடரில் இருந்து கோலி விலகி உள்ளதாக தகவல். வரும் 13-ம் தேதி தரம்சாலாவில் இந்த தொடர் தொடங்குகிறது.