Monday, 15 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

“ஸ்ரேயஸ் ஐயருக்காக மகிழ்ச்சி அடைகிறேன்” - சூர்யகுமார் யாதவ்

மும்பை: இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளதற்கு, முன்னாள் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மும்பை டி20 லீக் போட்டியின் டாஸ் நிகழ்வின் போது பேசிய சூர்யகுமார் யாதவ், “இந்திய டி20 அணியின் கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயர் பொறுப்பேற்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நாங்கள் இருவரும் மும்பையில்தான் ஒன்றாக கிரிக்கெட் விளையாடி வளர்ந்தோம். இந்தியாவின் கடைசி மூன்று டி20 கேப்டன்களும் (ரோஹித் சர்மா, சூர்யகுமார், ஸ்ரேயஸ்) மும்பையைச் சேர்ந்தவர்களாக இருப்பது பெருமையாக உள்ளது" என்று தெரிவித்தார்.

அண்மைக்காலமாக அவரது பேட்டிங் ஃபார்ம் சரிவைச் சந்தித்ததால், 2028 ஒலிம்பிக் மற்றும் டி20 உலகக் கோப்பையைக் கருத்தில் கொண்டு, அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு இந்த முடிவை எடுத்துள்ளது. முன்னதாக, உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே தனது அடுத்த இலக்கு என்று சூர்யகுமார் குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

கடந்த 2023 டிசம்பருக்குப் பிறகு இந்திய டி20 அணியில் இடம் பெறாமல் இருந்த ஸ்ரேயஸ் ஐயர், தற்போது நேரடியாகக் கேப்டனாகப் பொறுப்பேற்றுள்ளார். உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் தராததால் அணியிலிருந்து நீக்கப்பட்ட அவர், அதன்பின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஐபிஎல் 2024 கோப்பையை வென்று கொடுத்தார். தொடர்ந்து அடுத்த ஆண்டே பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்று, 165-க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களைக் குவித்து தனது திறமையை மீண்டும் நிரூபித்தார். இதன் காரணமாகவே தற்போது அவருக்குக் கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது.


டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் ஸ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா (துணைக் கேப்டன்), ரவி பிஷ்னோய், அபிஷேக் சர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, முகமது சிராஜ், சஞ்சு சாம்சன், அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, இஷான் கிஷன், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், சிவம் துபே, வருண் சக்கரவர்த்தி, பிரின்ஸ் யாதவ் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.