Monday, 15 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

கள் விற்பனையை அனுமதித்தால் விவசாயிகள் பயனடைவர்: உயர் நீதிமன்றம் கருத்து

மதுரை: தமிழகத்தில் கள் விற்பனையை அனுமதித்தால் விவசாயிகள் பயனடைவர் என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தென்காசியை சேர்ந்த பெருமாள் சேட், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: ஆலங்குளம் எஸ்.ஐ. இசக்கிராஜா மற்றும் போலீஸார் என் மகன் மணிகண்டனை பனைத்தோப்புக்கு அழைத்துச் சென்று பனை மரத்தில் கட்டப்பட்டுள்ள பானைகளில் கள் உள்ளதா? அல்லது பதநீர் உள்ளதா? என பார்க்குமாறு தெரிவித்தனர்.

அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் எஸ்.ஐ. இசக்கிராஜா துப்பாக்கியால் மணிகண்டனை சுட்டார். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது போலீஸ் விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி பி.புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. உதவி ஆட்சியரின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. எஸ்.ஐ. இசக்கி சுப்பையா தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது.

விசாரணையின்போது நீதிபதி, ‘கள்ளின் மருத்துவப் பயன் என்ன? அதிலிருந்து தயாரிக்கப்படும் வேறு பொருட்களின் பயன்கள் என்ன? என்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கை அடிப்படையில் கள் விற்பனைக்கு அரசு பரிசீலிக்க உத்தரவிடலாம்.

போலீஸாரின் செயல்பாடுகள் தனியார் மதுபானக் கூடங்களின் வருமானத்தை பெருக்கும் வகையிலேயே உள்ளன. கள்ளுக்கு தடை விதித்து, டாஸ்மாக் கடைகளை அரசே நடத்துகிறது. கள் விற்பனையை அனுமதித்தால், விவசாயிகள் பயனடைவர். புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் கள் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்திலும் கள் விற்பனைக்கு அனுமதி வழங்கலாம்.

இந்த வழக்கில் விவசாயி மீது 4 குண்டுகள் சுடப்பட்டுள்ளன. தனியாக இருந்த விவசாயியை நோக்கி 4 முறை சுட வேண்டிய அவசியம் என்ன?

காவல் துறையினர் எல்லை மீறி உள்ளனர். 3 காவலர்களால் ஒரு நபரை பிடிக்க முடியவில்லையா? விவசாயி தாக்கியதால் துப்பாக்கியால் சுட்டோம் என்பது ஏற்கும்படியான காரணம் அல்ல. இது தொடர்பாக காவல் துறை தரப்பில் பதிலளிக்க வேண்டும்.

அரசால் சட்டவிரோத கனிமவளக் கொள்ளையைத் தடுக்க முடியவில்லை. ஆனால், டாஸ்மாக் விற்பனையை தொடர்வதற்காக கள் தடுப்புச் சட்டத்தை மட்டும் கடுமையாக அமல்படுத்துகிறது. இதை கருத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும். தீர்ப்பு தள்ளி வைக்கப்படுகிறது’ என உத்தரவிட்டார்.