Tuesday, 01 September 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

‘வீட்டிலும் செய்யுங்களேன்...’ - மைதானத்தை சுத்தம் செய்த ஜப்பானிய ரசிகர்களிடம் கோரும் பெண்கள்

அந்தக் கால்பந்து போட்டி முடிந்துவிட்டது. ரசிகர்கள் மைதானத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், சில ஜப்பானிய ரசிகர்கள் மட்டும் தங்கள் இருக்கைகளின் அருகே குப்பைப் பைகளுடன் நின்று, பிளாஸ்டிக் பாட்டில்கள், உணவுக் கழிவுகள் மற்றும் பிற குப்பைகளை சேகரித்துக் கொண்டிருந்தனர்.

உலக விளையாட்டு அரங்குகளில் பல ஆண்டுகளாக பாராட்டப்பட்ட இந்தக் காட்சி, இந்த முறை ஜப்பானில் ஒரு புதிய விவாதத்தையும் உருவாக்கியது. “இந்தச் சுத்தம் செய்யும் பொறுப்புணர்வு வீட்டுக்குள்ளும் இருக்கிறதா?” என்ற கேள்வி சமூக வலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டது. அந்தக் கேள்விதான் ஜப்பானில் பாலின சமத்துவம், குடும்பப் பொறுப்புகள் மற்றும் வீட்டுப் பணிப் பங்கீடு குறித்த தேசிய விவாதமாக மாறியுள்ளது.

அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின்போது ஜப்பானிய ரசிகர்கள் வழக்கம்போல் மைதானத்தைச் சுத்தம் செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவின. உலகம் முழுவதும் பலர் அவர்களின் ஒழுக்கத்தையும் சமூகப் பொறுப்புணர்வையும் பாராட்டினர். அதைத் தொடர்ந்து, பாலின சமத்துவ ஆர்வலர் அட்சுகோ தமாடா வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு பெரும் கவனத்தை ஈர்த்தது.அந்தப் பதிவில், ‘ஒருபுறம் மைதானத்தில் குப்பைப் பையுடன் சுத்தம் செய்யும் ஆண் ரசிகரின் படம் இடம்பெற்றிருந்தது. மற்றொரு புறம், வீட்டில் சோபாவில் அமர்ந்து செல்போனை பயன்படுத்தும் ஆண், அருகில் வீட்டு வேலைகளில் ஈடுபடும் பெண் ஆகியோரைக் காட்டும் விளக்கப் படம் இடம்பெற்றிருந்தது. அதன் மேலே “Please do it at home too” (வீட்டிலும் இதைச் செய்யுங்கள்) என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.

இந்தப் பதிவு கிட்டத்தட்ட 20 லட்சம் பார்வைகளையும், 60,000-க்கும் மேற்பட்ட விருப்பக் குறிகளையும் பெற்றது. சில மணி நேரங்களுக்குள் அது ஜப்பானில் பரவலாக விவாதிக்கப்பட்டது.

ஏன் இந்த விமர்சனம்?

‘ஜப்பானிய ஆண்கள் பொதுவெளிகளில் சமூகப் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வதற்காக பாராட்டப்படுகிறார்கள். ஆனால் வீட்டுப் பணிகள் மற்றும் குழந்தை பராமரிப்பு போன்ற ஊதியம் இல்லாத வேலைகளில் பெண்களே இன்னும் அதிகச் சுமையை ஏற்றுக்கொள்கிறார்கள்’ என்கின்றனர் விமர்சகர்கள்.

ஓஇசிடி மற்றும் பிற ஆய்வுகளின்படி, வளர்ந்த நாடுகளில் வீட்டுப் பணிகளில் ஆண்கள் செலவிடும் நேரம் மிகவும் குறைவாக உள்ள நாடுகளில் ஜப்பான் ஒன்றாக உள்ளது. சராசரியாக ஜப்பானிய பெண்கள் தினமும் மூன்று மணி நேரத்திற்கும் அதிகமாக ஊதியம் இல்லாத வீட்டு வேலைகள் மற்றும் பராமரிப்புப் பணிகளில் ஈடுபடுகின்றனர். அதே நேரத்தில் ஆண்கள் செலவிடும் நேரம் சுமார் 47 நிமிடங்கள் மட்டுமே என ஆய்வுகள் கூறுகின்றன.சில மதிப்பீடுகளின்படி, ஆண்களைவிட சுமார் 5.5 மடங்கு அதிக நேரத்தை வீட்டுப் பணிகளில் பெண்கள் செலவிடுகின்றனர். இதுவே சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனத்தின் மையமாக அமைந்தது.

ஆனால், ஜப்பானிய ரசிகர்கள் மைதானத்தைச் சுத்தம் செய்வது புதிய விஷயமல்ல. 2018 ரஷ்யா உலகக் கோப்பை மற்றும் 2022 கத்தார் உலகக் கோப்பை தொடர்களின்போதும் ஜப்பானிய ரசிகர்கள் போட்டி முடிந்த பிறகு மைதானங்களைச் சுத்தம் செய்து சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தனர். பலருக்கு இது ஒரு சிறப்பான செயல் என்றாலும், ஜப்பானில் இது சாதாரண சமூகப் பொறுப்பாகவே கருதப்படுகிறது.

இதற்கு அடிப்படையாக இருப்பது ‘சவுஜி’ (Souji) எனப்படும் சுத்தம் செய்யும் கலாச்சார மரபு. பொதுவெளிகளை மதிப்பது, பயன்படுத்திய இடத்தை சுத்தமாக விட்டுச் செல்வது மற்றும் சமூகத்தின் மீது பொறுப்புணர்வு கொண்டிருப்பது ஆகியவை இந்த மரபின் முக்கிய அம்சங்களாகக் கருதப்படுகின்றன.

ஜப்பானிய பள்ளிகளிலும் மாணவர்கள் தங்களது வகுப்பறைகள், நடைபாதைகள் மற்றும் கழிப்பறைகளைத் தாங்களே சுத்தம் செய்யும் நடைமுறை உள்ளது. சிறுவயதிலிருந்தே இந்தப் பழக்கம் கற்றுக்கொடுக்கப்படுவதால், சுத்தம் செய்வது பலருக்கு ஒரு தனிப்பட்ட கடமையாக அல்லாமல் சமூகப் பொறுப்பாகக் கருதப்படுகிறது.