Tuesday, 01 September 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

பட்டா நிலத்தில் உடல் அடக்கம் செய்ய அனுமதியில்லை: உயர் நீதிமன்றம்

மதுரை: பட்டா நிலங்களில் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்க முடியாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தென்காசியைச் சேர்ந்த சாந்தி என்பவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘என் மாமனார் அய்யப்பன் ஆக.3-ல் உயிரிழந்தார். எங்கள் குடும்ப உறுப்பினர்கள் இறந்தால் அவர்களின் உடல் எங்கள் குடும்பத்திற்கு சொந்தமான பட்டா நிலத்தில் அடக்கம் செய்யப்படுவது வழக்கம். அதேபோல் மாமனாரின் உடலையும் பட்டா நிலத்தில் அடக்கம் செய்ய அனுமதி வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி சி.சரவணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், “குடியிருப்புகள் அல்லது குடிநீர் ஆதாரங்களிலிருந்து 90 மீட்டர் தூரத்திற்குள் அரசு அங்கீகாரம் பெற்ற அடக்க ஸ்தலங்களை தவிர வேறு எந்த இடத்திலும் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படுவதில்லை.

அங்கீகரிக்கப்படாத இடங்களில் உடல்களை அடக்கம் செய்வது சட்டவிரோதம். பொதுச் சுகாதாரத்தை பாதுகாக்க 2023-ம் ஆண்டு உயர் நீதிமன்ற முழு அமர்வு வழங்கிய தீர்ப்பில், அனுமதியற்ற இடங்களில் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டால் அவற்றை தோண்டி எடுத்து, அங்கீகரிக்கப்பட்ட மயானத்தில் மீண்டும் அடக்கம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது” என்றார்.அரசு தரப்பு வாதங்களை கேட்ட நீதபதி, ‘மனுதாரர் கோரும் நிவாரணத்தை வழங்க முடியாது. மனுதாரர் கிராமத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பொது மயானத்தில் உடலை அடக்கம் செய்து கொள்ளலாம். அதற்குத் தேவையான உதவிகளை கிராம நிர்வாக அலுவலர் வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தார்.