Friday, 16 October 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

ஆசிய விளையாட்டுப் போட்டி: ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது இந்திய மகளிர் கபடி அணி

டோகாய் (ஜப்பான்): ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஈரானை வீழ்த்தி இந்திய மகளிர் கபடி அணி தங்கப்பதக்கம் வென்றது. இதன்மூலம், இந்தியா வென்றுள்ள தங்கப்பதக்கங்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

ஜப்பானின் டோகாய் நகரில் உள்ள சிட்டிசன் ஜிம்னாசியத்தில் நடைபெற்ற கபடி இறுதிப் போட்டியில் ஈரான் அணியும் இந்திய அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், இந்திய அணி 37-34 என்ற புள்ளிக் கணக்கில் ஈரானை வீழ்த்தியது.

இதன்மூலம், நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா வென்றுள்ள தங்கப்பதக்கங்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கு முன், மகளிர் கிரிக்கெட் அணியும், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி பிரிவில், சுருச்சி சிங் போகத் மற்றும் கமல்ஜீத் ஜோடியும் தங்கப் பதக்கம் வென்றன.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 2010 முதல் மகளிர் கபடிப் போட்டி இடம்பெற்று வருகிறது. 2018-ம் ஆண்டு போட்டிகளில் ஈரானுக்கு அடுத்படியாக இந்தியா இரண்டம் இடம் பிடித்தது. அதன் பிறகு அனைத்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இந்திய மகளிர் அணி தங்கப்பதக்கத்தையே வென்றுள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கபடிப் பிரிவில் இந்தியா வெல்லும் 12வது தங்கப்பதக்கம் இதுவாகும். இதில்,1990 முதல் ஆண்கள் அணி 8 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது. இன்று நடைபெற உள்ள ஆண்கள் கபடி இறுதிப்போட்டியில் இந்திய அணி, ஈரானை எதிர்கொள்கிறது.

பதக்கப்பட்டியலில் 102 தங்கம், 38 வெள்ளி, 25 வெண்கலம் என 165 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது. 29 தங்கம், 43 வெள்ளி, 45 வெண்கலம் என 117 பதக்கங்களுடன் ஜப்பான் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. 13 தங்கம், 18 வெள்ளி, 35 வெண்கலம் என 66 பதக்கங்களுடன் தென் கொரியா மூன்றாவது இடம் பிடித்துள்ளது. 3 தங்கம், 11 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களுடன் இந்தியா 12வது இடம் பிடித்துள்ளது.