Saturday, 18 July 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

131 நாட்களுக்குப் பின் ஈரான் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச் சடங்கு - ஏன் இந்த தாமதம்?

ஈரான் - அமெரிக்கா இடையே நடந்த போரில் கடந்த பிப்ரவரி மாதம் கொல்லப்பட்ட ஈரானின் உச்சப தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் உடல் 131 நாட்களுக்குப் பின் ரகசிய இடத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு இன்று முதல் 6 நாட்களுக்கு இறுதி அஞ்சலி நிகழ்ச்சி நடக்கிறது.

ஜூலை 4-ம் தேதி (இன்று) தொடங்கும் இறுதிச் சடங்கு நிகழ்வுகள், ஈரான் மற்றும் ஈராக் நாடுகளில் மக்களின் அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டு 9-ம் தேதி கமேனியின் உடல் சொந்த நகரில் அடக்கம் செய்யப்படுகிறது.

ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உரசல், மோதல் சமீபத்திய ஆண்டுகளில் ஏற்பட்டது அல்ல. கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக அணைக்க முடியாமல் எரிந்துகொண்டிருக்கும் பகை.

கடந்த 1953-ம் ஆண்டில் முகமது முசாடக்கை அமெரிக்கா ஆட்சியை விட்டு அகற்றியபோது பற்றிக்கொண்ட பகை நெருப்பு, 1979-ம் ஆண்டு அமெரிக்க ஆதரவு ஷாவை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு இஸ்லாமிய குடியரசாக ஈரான் அறிவித்தது. அப்போது கொளுந்துவிடத் தொடங்கிய பகை இன்று வரை பற்றி எரிகிறது.

இதுவரை ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் மறைமுக பனிப்போராக இருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போர் உச்சக் கட்டத்தை எட்டியது.

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவின் பெயரில் அந்நாட்டு ராணுவம் நடத்திய தாக்குதல் மேற்கு ஆசியாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது, ஈரானும் பதிலடி கொடுத்தது. ஆனால், அமெரிக்க ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஈரானின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட 86 வயதான அயத்தலுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அவருடன் சேர்ந்து அவரின் மகள், மருமகன், பேரன், பேத்திகள், என குடும்பத்தினர் பலர் கொல்லப்பட்டனர்.ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் பல வாரங்களுக்கு நீடித்து. ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடியதால், உலக நாடுகளின் சரக்குக் கப்பல்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகத்தில் பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த மாதம் 17-ம் தேதி அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பட்டமிட்டு 60 நாட்களுக்கு போரை நிறுத்த ஒப்புதல் தெரிவித்தன.

கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து பல வாரங்களாக போர் நடந்ததால், அமெரிக்கா தாக்குதலில் கொல்லப்பட்ட அயத்துல்லா அலி கமேனி, அவரின் குடும்பத்தினர் உடல்கள் அடக்கம் செய்யப்படாமல், பதப்படுத்தப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இப்போது போர் நிறுத்தம் செய்யப்பட்டிருப்பதால், வெளியே எடுக்கப்பட்டு மக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

இறுதிச் சடங்கு நடைமுறை

இஸ்லாமிக் குடியரசு செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, ‘ஈரான் உச்ச தலைவர் அயத்தல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு இன்று (ஜூலை 4) தொடங்குகிறது. நாளை (ஜூலை 5) தலைநகர் டெஹ்ரானில் உள்ள இமாம் கமேனி மொசல்லாவில் கமேனி மற்றும் அவரின் குடும்பத்தினர் உடல்கள் வைக்கப்படுகின்றன.

இறுதிச் சடங்கு 6-ம் தேதி தொடங்குகிறது. புனித குவாம் நகருக்கு உடல்கள் கொண்டு செல்லப்பட்டு, இறுதியாக 9-ம் தேதி புனித நகரான மஸ்ஹாத்தில் சடங்குகள் நடக்கின்றன. மஸ்ஹாத் நகரில் உள்ள இமாம் ரேஹா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கமேனி மற்றும் குடும்பத்தினர் உடல்கள் அடக்கம் செய்யப்படுகின்றன.

அயத்துல்லா அலி கமேனியின் உடலைக் காணவும், இறுதி அஞ்சலி செலுத்தவும் 1.5 கோடி முதல் 2 கோடி மக்கள் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 1989-ம் ஆண்டிலிருந்து ஈரான் நாட்டை வழிநடத்திச் சென்ற கமேனிக்கு மக்கள் செலுத்தும் இறுதி அஞ்சலியாகவும், அதேசமயம், அவரைக் கொன்ற அமெரிக்காவுக்கு எதிராகவும் சபதம் ஏற்கவும் இந்த அஞ்சலிக் கூட்டம் அமையும் என்று ஈரான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஈரானின் உச்ச தலைவர் கமேனியின் உடல் டெஹ்ரானில் உள்ள கிராண்ட் மொசல்லாவில் வைக்கப்பட்ட நிலையில், இறுதிச் சடங்கில் 30 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளில் இருந்தும் திரளான மக்கள் வந்து அஞ்சலி செலுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல்வேறு நாடுகளில் இருந்து எத்தனை பேர் பங்கேற்பார்கள் என்ற இறுதி அறிக்கையை ஈரான் அரசு உறுதியாக இன்னும் அறிவிக்கவில்லை. சர்வதேச தலைவர்கள் வருவதால், கமேனியின் உடல் வைக்கப்படும் இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இறுதிச் சடங்கு ஏன் தாமதம்?

இஸ்லாமிய மரபுப்படி, ஒருவர் உயிரிழந்தால், அவரின் உடல் 24 மணிநேரத்தில் புதைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஈரான் அதிகாரிகள் இறுதிச் சடங்கை தள்ளி வைத்தனர்.

அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டவுடன் இறுதிச் சடங்கு நடத்த முடியாத சூழல் நிலவியது. அமெரிக்கா - ஈரான் இடையே போர் தீவிரம் அடைந்திருந்த நேரத்தில் அஞ்சலிக்காக மக்கள் திரண்டால் பெரிய அளவில் பாதகச் சூழல் ஏற்படும் என்று ஈரான் அதிகாரிகள் எண்ணினர்.

ஈரான் - அமெரிக்கா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபின், முதல்நிலை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட பின்புதான் ஈரானில் நிலைத்தன்மை ஏற்பட்டு, மக்கள் கூடுவதற்கு பாதுகாப்பான சூழல் ஏற்படும் என்று அதிகாரிகள் நம்பினர்.இப்போது ஈரானின் பல தலைவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால், மக்கள் கூடுமிடங்களில் வருவதற்கும் அஞ்சுகிறார்கள். குறிப்பாக ஈரானின் புதிய உச்ச தலைவரும், கமேனியின் மகனுமான மோஜ்தபா கமேனி தனது தந்தையின் இறுதிச் சடங்கையே தவிர்ப்பார் எனத் தெரிகிறது. அவர் பங்கேற்பு குறித்து அதிகாரிகள் ஏதும் கூறவில்லை.

கடந்த 1989-ம் ஆண்டு அயதுல்லா ருஹெல்லா கமேனி இறுதிச் சடங்கு, 2020-ம் ஆண்டு அமெரிக்கா தாக்குதலில் கொல்லப்பட்ட குவாசிம் சுலைமான் இறுதிச் சடங்கில் கடலென திரண்ட மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனது. அதுபோன்று நடந்துவிடக் கூடாது என்பதால், அதிகாரிகள் இறுதிச் சடங்கை தள்ளி வைத்தனர்.

உடல் பாதுகாக்கப்பட்டது எப்படி?

86 வயதான கமேனி கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்க ராணுவத்தின் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரின் உடல் மிகுந்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தது. இஸ்லாமிய மரபுகள், மனித உடலை ரசாயனத்தால் பாதுகாப்பதை முற்றிலும் தடை செய்கிறது என்பதால், கமேனியின் உடலை மைனஸ் டிகிரி உறை பனியிலேயே அதிகாரிகள் வைத்திருந்தனர்.

குளிர்சாதன வசதியுடன் பதப்படுத்தப்படும் பெட்டியில் மிகுந்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தது. ஷியா பிரிவுப்படி ஒருவர் உயிரிழந்தவுடன் புதைக்கப்பட வேண்டும், ஆனால், விதிவிலக்கில் இவ்வாறு செய்ய அனுமதிக்கிறது.

டெஹ்ரானில் உள்ள கிராண்ட் மொசல்லா மசூதியில் வைக்கப்பட்டிருக்கும் கமேனி மற்றும் அவரது குடும்பத்தாரின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்த அவரின் உறவினர்கள் இன்று வருகிறார்கள்.

இதன்பின் ஈரான், ஈராக்கில் உள்ள 5 நகரங்களுக்கு கமேனியின் உடல் கொண்டு செல்லப்பட்டு, 9-ம் தேதி கமேனியின் சொந்த நகரான மஸ்ஹாத்தில் உள்ள இமாம் ரேஸா மசூதியில் அடக்கம் செய்யப்படுகிறது.