தூத்துக்குடி ,மார்ச் 17: தூத்துக்குடியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தைப் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதை அடுத்து, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்ற னர். அதன்படி, தூத்துக்குடி யூனியன் மண்டல வட்டார வளர்ச்சி துணை அலுவலர் பழனிச்செல்வி தலைமையி லான குழுவினர், இன்று தூத்துக்குடி ரோச் பூங்கா அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை யிட்டனர். காரை தூத்துக்குடியைச் சேர்ந்த முருகன் மகன் மாரிக்கண்ணன் என்பவர் ஓட்டி வந்தார். சோதனை யின்போது, காரில் உரிய ஆவணங்கள் இன்றி 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அந்தப் பணத்தைப் பறி முதல் செய்த அதிகாரிகள், தூத்துக்குடி தேர்தல் நடத்தும் அலுவலர் திருமணி ஸ்டாலினிடம் ஒப்படைத்தனர்.
இந்த நிகழ்வின்போது, தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனந்த், தேர்தல் துணை வட்டாட்சியர் ஜெயகிருஷ்ணன், காவல் உதவி ஆய்வாளர் நாராயணன் மற்றும் இதர தேர்தல் பிரிவு அதிகாரிகள் உடனிருந்தனர். பறிமுதல் செய்யப் பட்ட பணம் குறித்து வருமான வரித் துறை மற்றும் தேர்தல் பிரிவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி ரோச் பூங்கா அருகில் தோட்டக்கலைத் துறை அலுவலர் சிவகுருநாதன் தலைமையிலான பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழி யாக வந்த காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர். காரில் வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த விஜயராகவன் என்பவர், உரிய ஆவணங்களின்றி 56,580 ரூபாய் பணத்தை வைத்திருந்தது தெரியவந்தது. கணக்கில் வராத அந்தப் பணத்தை அதிகாரிகள் உடனடியாகப் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை, தூத்துக்குடி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், வட்டாட்சியருமான திருமணி ஸ்டாலினிடம் பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனர். இந்த நிகழ்வின் போது, தூத்துக்குடி தேர்தல் துணை வட்டாட்சியர் ஜெயகிருஷ்ணன் மற்றும் வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் உடனிருந்தனர்.