Tuesday, 01 September 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் நாளை முதல் ஜூலை 28 வரை வெப்பநிலை 7 டிகிரி உயரும்

சென்னை: தமிழகத்தில் மதுரை, வேலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நாளை முதல் 28-ம் தேதி வரை வெப்பநிலை வழக்கத்தைவிட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குஜராத்திலிருந்து கர்நாடகா வரை சராசரி கடல் மட்டத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். 26-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகம், வட தமிழகத்தின் உள் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். 27 முதல் 30-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

நாளை முதல் 28-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வேலூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்கக்கூடும். இதர தமிழகத்தில் வெப்பநிலை வழக்கமான அளவிலேயே இருக்கும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூர், விண்ட் வொர்த் எஸ்டேட்டில் தலா 3 செமீ, செருமுள்ளி, வூட் பிரையர் எஸ்டேட், தேவாலா, மேல் பவானி, அவலாஞ்சியில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.