Saturday, 17 October 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

சென்னையில் சிறப்பு முகாம்கள் மூலம் இதுவரை 86,489 தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி

சென்னை: மாநகராட்சி சார்பில் சிறப்பு முகாம்கள் மூலம் இதுவரை 86,489 தெருநாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியில் வெறிநாய்க்கடி பாதிப்பிலிருந்து பொதுமக்களை காக்க, அனைத்து தெரு நாய்களுக்கும் ரேபிஸ் தடுப்பூசி மற்றும் அகப்புற ஒட்டுண்ணி மருந்து செலுத்தும் மாபெரும் முகாம் கடந்த ஆக.11-ம் தேதி தொடங்கப்பட்டது.

இம்முகாம் மூலம் திருவொற்றியூர், மணலி, தண்டையார்பேட்டை, மாதவரம் மற்றும் ராயபுரம் ஆகிய 5 மண்டலங்களிலும், அனைத்து இடங்களிலும் உள்ள தெரு நாய்களுக்கும் ரேபிஸ் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, அம்பத்தூர், அண்ணாநகர் மற்றும் ஆலந்தூர் மண்டலங்களில் உள்ள அனைத்து தெருக்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் உள்ள தெரு நாய்களுக்கும் ரேபிஸ் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தப்பட்டு வருகிறது.

இதுவரை திருவொற்றியூர் மண்டலத்தில் 12,313, மணலி மண்டலத்தில் 7,200, தண்டையார்பேட்டை மண்டலத்தில் 12,477, ராயபுரம் மண்டலத்தில் 8,598, அம்பத்தூர் மண்டலத்தில் 18,627, மாதவரம் மண்டலத்தில் 16,956, அண்ணாநகர் மண்டலத்தில் 9,653, ஆலந்தூர் மண்டலத்தில் 665 என மொத்தம் 86,489 தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


தற்போது அம்பத்தூர், அண்ணாநகர் மற்றும் ஆலந்தூர் மண்டலங்களில் தலா 10 குழுக்களை பயன்படுத்தி இந்த சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

இந்த 3 மண்டலங்களில் சிறப்பு முகாம் முடிவுற்றவுடன், திரு.வி.க.நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் இம்முகாம் நடத்தப்பட்டு 39 வேலை நாட்களுக்குள் அனைத்து மண்டலங்களிலும் சுமார் 2 லட்சம் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசியும் மற்றும் அக, புற ஒட் டுண்ணி நீக்கும் மருந்துகள் செலுத்தப்பட உள்ளன. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.