Monday, 15 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

தூத்துக்குடியில் ஓபிஎஸ் அணியினர் கொந்தளிப்பு - அலுவலகத்தில் படங்களை அகற்றிய மாவட்ட செயலாளர்!

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ளது தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று காலை தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்த அதிரடி மாற்றம் அவரது ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ்-ஸின் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், தூத்துக்குடி மாநகர் மாவட்ட ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் எஸ். ஏசாத்துறை, தனது அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஓ. பன்னீர்செல்வத்தின் புகைப்படங்களை உடனடியாக அப்புறப்படுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஏசாதுரை "அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆருக்கும், அவரை முதலமைச்சராக்கி அழகு பார்த்த புரட்சித்தலைவி அம்மாவுக்கும் ஓ. பன்னீர்செல்வம் மிகப்பெரிய நம்பிக்கை துரோகத்தைச் செய்துவிட்டார். இவரை எம்.ஜி.ஆர் மற்றும் அம்மாவின் ஆத்மாக்கள் என்றும் மன்னிக்காது. மேலும், தூத்துக்குடியில் உள்ள தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தி, அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஓபிஎஸ்-ஸின் இந்த இடமாற்றம் தூத்துக்குடி மாவட்ட ஓபிஎஸ் அணியினரிடையே பெரும் பிளவையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.