பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே சென்று கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மாண்புமிகு முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள், கடந்த வாரங்களில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஒரு மாதத்திற்கு மேலாக நடவடிக்கை எடுக்கப்படாத மனுக்களின் விவரங்களையும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டு மனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்றவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், கலைஞர் மகளிர் உரிமை தொகைத் திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம், அடிப்படை வசதிகள் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 435 மனுக்களை பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்ட அலுவலர்கள் பெற்றுக்கொண்டனர்.
அதனை தொடர்ந்து, தொழிலாளர் நல அலுவலகம் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சார்பில் திருமண உதவித் தொகை, விபத்து மரண உதவித் தொகை, இயற்கை மரண உதவித் தொகை, இலவச வீடுகட்டுவதற்கு ஆணை என 7 பயனாளிகளுக்கு ரூ.13,40,000 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் க.கண்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வாசுதேவன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சிவக்கொழுந்து, தாட்கோ பொது மேலாளர் கவியரசு, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் திரு.பாஸ்கரன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.