Monday, 15 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாட்டால் தேனியில் ஓட்டல்கள், டீ கடைகளின் நேரம் குறைப்பு

தேனி: வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாடு தொடங்கியுள்ளதால் தேனி மாவட்டத்தில் டீ கடைகள், ஓட்டல்கள் செயல்படும் நேரம் வெகுவாய் குறைக்கப்பட்டுள்ளன. சாலையோர கடைகளைப் பொறுத்தளவில் சிலிண்டர்களையே நூறு சதவீதம் சார்ந்திருப்பதால் இதன் வர்த்தகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா - இஸ்ரேல், ஈரான் போரால் தற்போது தேசிய அளவில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வீட்டு உபயோகத்துக்கு மட்டும் சிலிண்டர் விநியோகம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தேனி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் சுமார் 1,500 ஓட்டல்கள் உள்ளன. சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக உணவுப் பொருள் விற்பனையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பலரும் கள்ள சந்தையில் கூடுதல் விலைக்கு விற்கத் தொடங்கியுள்ளனர். பெரிய ஓட்டல்களைப் பொறுத்தளவில் விறகு அடுப்புகளை கொண்டு உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், சாலையோர கடைகள், டீ, வடை, சிற்றுண்டி, துரித உணவு விற்பனை உள்ளிட்ட வர்த்தகங்கள் சிலிண்டரையே நூறு சதவீதம் சார்ந்துள்ளன. இதனால் இக்கடைகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளன.

இந்நிலையில், இன்று (மார்ச் 10) முதல் பல கடைகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அதாவது டீ கடைகளை மதிய நேரங்களில் மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஓட்டல்களில் உள்ள உணவு வகைகளை வெகுவாய் குறைக்கவும் முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து தேனி மாவட்ட ஓட்டல் சங்க செயலாளர் பி.பொன்முருகன் கூறுகையில், “மாவட்டத்தில் உள்ள ஓட்டல்களில் 60 சதவீதம் கேஸ் சிலிண்டர் மூலமே உணவு தயாரிக்கப்பட்டு வருகிறது. தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சாலையோர உணவு கடைகள் பெரிதும் பாதிக்கப்படும். விலை உயர்வை கட்டுப்படுத்த ஓட்டல்களுக்கு தடையின்றி சிலிண்டர் விநியோகம் செய்ய வேண்டும்” என்றார்.