150 சுமங்கலிகளுக்கு சேலை மற்றும் மங்களப் பொருட்கள் வழங்கினார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம் திருவள்ளுவர் நகர் 2ல் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீபட்டத்தரசியம்மன் ஸ்ரீமதுரை வீரன் திருக்கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா 22.02.26 அன்று ஸ்ரீஅய்யனார் ஆதீனம் குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹரஸ்ரீ ஸ்ரீனிவாசசுவாமிகள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 18.03.26 அன்று மண்டல பூஜை நிறைவு விழாவில் திருவிளக்கு பூஜையுடன் தொடங்கி சுமங்கலி பூஜை மற்றும் மஹா அன்னதானம் ஸ்ரீஅய்யனார் ஆதீனம் தலைமையில் மிக சிறப்பாக ஆன்மீக எழுச்சியுடன் நடைபெற்றது. ஸ்ரீஅய்யனார் சுவாமி திருக்கோவில், ஸ்ரீஅய்யனார் ஆதீனம் திருமடம் சார்பில் ஸ்ரீஅய்யனார் ஆதீனம் குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹரஸ்ரீ ஸ்ரீனிவாசசுவாமிகள் திருக்கரங்களால் 150 சுமங்கலிகளுக்கு சேலை மற்றும் மங்களப் பொருட்களை வழங்கி இல்லங்களில் சகல ஐஷ்வர்யமும் மங்களமும் பெருக வேண்டும் என சுவாமிஜி அவர்கள் வாழ்த்தி அருளாசி வழங்கினார்.

தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு ஸ்ரீஅய்யனார் ஆதீனம் அவர்கள் மஹா அன்னதானம் வழங்கி அருளாசி வழங்கினார்கள். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மஹா அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்வில் சுமங்கலிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீபட்டத்தரசி அம்மனின் திருவருளையும் ஸ்ரீஅய்யனார் ஆதீனம் அவர்களின் அருள் ஆசியும் பெற்று மகிழ்ச்சியுடன் மனநிறைவுடன் சென்றனர்.
மண்டல பூஜை நடைபெறும் ஆலயம் தெய்வீக சக்தியால் நிரம்பி, பக்தர்களின் வாழ்வில் அமைதி, வளம், நன்மை ஆகியவற்றை அளிக்கிறது என்று உணர்த்தும் வகையில் இவ்விழா அமைந்தது. விழாவில் கலந்து கொண்ட ஸ்ரீஅய்யனார் ஆதீனம் அவர்களுக்கு கோயில் நிர்வாகத்தினர் சார்பில் பூர்ண கும்பம் சிறப்பு மரியாதை வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழு மற்றும் ஊர் பொதுமக்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.