Monday, 15 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

முதல்வர் விஜய்யின் ஒரு மாத கால ஆட்சி எப்படி? - தவெக அரசு மீதான பாராட்டுகளும் விமர்சனங்களும்

தவெக ஆட்சி அமைத்து ஒரு மாத காலம் உருண்டோடிவிட்டது. தமிழக வெற்றிக் கழகமும், அதன் தலைமை ச.ஜோசப் விஜய்யும் தமிழக ஆட்சி அரியணைக்கு புதிய வரவுதான். என்றாலும் மிகப் பெரிய எதிர்பார்ப்பு, அதனினும் பெரிதான மக்கள் ஆதரவுள்ள வரவு என்பது குறிப்பிடத்தக்கது. அதன் அடிப்படையில், ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ மொழிக்கு மட்டுமல்ல, அரசியலுக்கும் நல்லது என்பதை மறுப்பதற்கில்லை. இந்தப் பின்னணியில் முதல்வர் விஜய்யின் ஒரு மாத கால ஆட்சி மீதான பாராட்டுகள், விமர்சனங்கள் குறித்து ஒரு விரைவுப் பார்வையை செலுத்துவோம்.

59 ஆண்டுகளாக தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி செய்தது திமுகவும், திமுகவை எதிர்க்க உருவாக்கப்பட்ட அதிமுகவும். அடிப்படைக் கொள்கைகளில் பெரிய வித்தியாசம் இரண்டுக்கும் இல்லை. அவற்றை எப்படி செயல்படுத்தின, மத்தியில் இருந்த ஆட்சியாளர்களிடம் மாநிலத்துக்காக என்னென்ன சாதித்தனர் என்பதில்தான் வித்தியாசம் இருந்தன.

“மதம், சாதி, நிறம், இனம், மொழி, பாலின அடையாளம், பொருளாதார என்கிற தனி அடையாளங்களுக்குள் மனித சமூகத்தைச் சுருக்காது, தமிழ்நாட்டில் வாழும் அனைத்து மக்களின் தனிமனித, சமூக, பொருளாதார அரசியல் உரிமைகளை நிலைநிறுத்தி எல்லோர்க்கும் எல்லாமுமான சமநிலைச் சமூகம் உருவாக்குவது,” என்ற கொள்கையில் தங்கள் கட்சி கட்டியெழுப்பப்பட்டு இருப்பதாக தவெகவின் அதிகாரபூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில், தவெக அரசின் சில செயல்பாடுகளை நிச்சயமாகப் பாராட்டியே ஆகவேண்டும். அதில் முதலாவது, முதன்முறையாக அமைச்சரவையில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு வாய்ப்பு கொடுத்தது. 4 பெண் அமைச்சர்களை உருவாக்கியது. தொழில் துறைக்கு முதன்முறையாக ஒரு பெண்ணை அமைச்சராக்கியது என்று பட்டியலிடலாம்.ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பது பேசக் கூடாத வார்த்தைகள் போல் கூட்டணிக் கட்சிகளை திமுக, அதிமுக பண்ணையார்த்தனத்தோடு அணுகிய நிலையில், காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் என்று கூட்டணிக்கு வந்தவர்களுக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு கொடுத்திருக்கிறது தவெக.

அடுத்தடுத்து நாற்காலிக்கு சிக்கல் வராமல் இருப்பதற்கான நுட்பமான நகர்வு என்றாலும்கூட இது தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தை தொடக்கியுள்ளது.

இனி கூட்டணிக்கு வரும் கட்சித் தலைவர்களிடம், “நீ எனக்கு தம்பி மாதிரி” போன்ற வசனங்களோடு கட்டுப்படுத்த முடியாது. இத்தகைய ‘செக்’, ஆண்ட கட்சிகளுக்கு அவசியமானதே என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.இளைஞரணியை கருத்தாய் கவனிக்கத் தவறிய திமுக, இளைஞர், இளம்பெண் பாசறைகளில் கோட்டைவிட்ட அதிமுக மத்தியில் கைவசமிருந்த தேர்தல் உத்தியாளர்களைக் கொண்டு இளைஞர்களைத் தட்டித் தூக்கியதோடு, அரசியலில் அவர்களின் முக்கியத்துவத்தை கற்பித்துக் கொடுத்த தவெக அரசில் 41 எம்எல்ஏக்கள் 40 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள்.

“திமுகவில் உள்ள பழைய மாணவர்கள் பலர் தேர்வில் ரேங்க் எடுத்தும் வகுப்பை விட்டு வெளியேற மறுக்கின்றனர்” என்று ரஜினி அன்று சொன்னது தவெகதான் சரியாக உள்வாங்கிக் கொண்டதுபோல!

தவெக ஆட்சியைப் பிடித்தாலும், அது கூட்டணி ஆட்சிதான். அதனால் அரசியல் ரீதியாக யார் வகுத்துக் கொடுத்த சூத்திரமோ தெரியவில்லை, அதிமுகவின் முக்கிய முகங்களை எல்லாம் வளைத்துப் போட்டுக் கொண்டுள்ளது.

‘பூத் கமிட்டி கூட இல்லாத கட்சி என்ற விமர்சனத்தை இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் பொய்யாகியது என்றே வைத்துக் கொண்டாலும்கூட, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல், 2029 மக்களவைத் தேர்தல் என்று தன் இருப்பை பலமாக்க அரசியலில் முங்கு நீச்சல் தெரிந்தவர்கள் வேண்டும் என்று கட்சியை வலுப்படுத்திக் கொண்டு வருகிறது. அதை ‘குதிரை பேரம்’ என்றும் சொல்லலாம். ஒரு காந்தம் போல் எல்லாவற்றையும் ஈர்த்துக் கொண்டிருக்கிறது. அதிமுகவை கரைக்கிறது, திமுகவை கரைக்குமா’ என்றும் விவாதங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.அமைப்பு ரீதியாக இதெல்லாம் என்றால், ஆட்சி ரீதியாக தவெகவின் கான்க்ரீட் ஆக்‌ஷன் என்னவென்று பார்ப்போம்.