Friday, 16 October 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

மேகேதாட்டு தீர்மான திருத்த வழக்கு: அதிமுக மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

சென்னை: காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அருகே கர்நாடக அரசு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை எதிர்த்து அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேகேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜூன் 19-ம் தேதி தமிழகத்தின் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறுதியில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற வாசகம் சேர்க்கப்பட்டது.

இந்த திருத்தத்தை எதிர்த்து அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது. அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில், சிறப்பு தீர்மானம் தொடர்பாக ஜூன் 18 ஆம் தேதி எம்எல்ஏக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தீர்மான நகலில் இடம்பெறாத திருத்தத்தின் மீது எந்த விவாதமும் நடத்தப்படாமல் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த திருத்தம் ஏக மனதாக நிறைவேற்றப்படவில்லை; ஆனால் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக மத்திய அரசுக்கு அந்த தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, சபாநாயகர், பேச அனுமதிக்கவில்லை என வாதிடப்பட்டது. தமிழக அரசு தரப்பில் கடந்த ஜூன் 19 ஆம் தேதி சட்டப்பேரவையில் நடைபெற்ற நிகழ்வுகளின் வீடியோ காட்சிகளை நீதிபதிகளிடம் காட்டி வாதிட்டப்பட்டது.

அப்போது, எதிர்க்கட்சித் தலைவரின் திருத்தத்தை ஏற்று அதனை தீர்மானத்தில் சேர்க்க வேண்டும் என முதல்வர் கேட்டுக் கொண்டார்; இதனை ஏற்றுக் கொண்டு சபாநாயகர் திருத்தத்துடன் தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விட்டார். திருத்தம் கொண்டு வரப்பட்டபோது எவரும் எதிர்க்கவில்லை.

சட்டப்பேரவை நடவடிக்கைகளை நீதிமன்றத்தில் கேள்வி எழுப்ப முடியாது; அதற்கு அரசியல் சாசனம் தடை விதிக்கிறது; மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்தை சட்டப்பேரவையில் முடிவாக கருதி வழக்குத் தொடர முடியாது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் செப்டம்பர் 9-ம் தேதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த தலைமை நீதிபதி அமர்வு, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.