பட்டுக்கோட்டை: தமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆயுத பூஜையை முன்னிட்டு தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் பூக்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை பூ ரூபாய் 1,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் கனகாம்பரம், முல்லை தலா ரூபாய் 1,500, செவ்வந்தி ரூபாய் 300, அரளி ரூபாய் 600, ஆப்பிள் ரோஸ் ரூபாய் 450க்கு விற்பனையாகி வருகிறது. பூக்களின் விலை அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் கலர் பேப்பர் தோரண மாலை, பேப்பர் நிலை மாலை, பேப்பர் மா இலை தோரணம், கலர் மாலை ஆகியவற்றை வாங்கிச் செல்வதில் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பட்டுக்கோட்டையில் இதன் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது.இதற்காக பட்டுக்கோட்டை நகரத்தில் பெரியதெரு, பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே, தலையாரிதெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு கடைகளில் கலர் பேப்பர் மாலை விற்பனை சூடு பிடித்துள்ளது. கலர் பேப்பர் மாலை 70 ரூபாயிலிருந்து 600 ரூபாய் வரை உள்ளது. அதேபோல் கலர் பேப்பர் தோரண மாலை 30 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை உள்ளது. பேப்பர் நிலை மாலை 300 ரூபாயிலிருந்து ரூபாய் 1,000 வரை உள்ளது. பேப்பர் மா இலை தோரணம் 5 ரூபாயிலிருந்து 60 ரூபாய் வரை உள்ளது.அதேபோல் கலர் டூம், அனார், பந்து ஆகியவை 5 ரூபாயிலிருந்து முதல் முதல் 200 ரூபாய் வரை உள்ளது. பூக்களின் விலை அதிகமாக இருப்பதாலும், இது போன்ற கலர் பேப்பர் மாலைகளை மீண்டும் பலமுறை பயன்படுத்தலாம் என்பதாலும் பொதுமக்கள் கலர் பேப்பர் மாலைகளை வாங்கிச் செல்வதில் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது குறித்து கலர் பேப்பர் மாலை விற்பனை செய்யும் வியாபாரி சரவணன் கூறுகையில், பூக்கள் விலை அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் கலர் பேப்பர் மாலைகளை வண்ண வண்ண கலரில் அவர்கள் எதிர்பார்த்த டிசைன்களில் விலை குறைவாக இருப்பதால் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.மேலும் மாலைகளும், பூக்களும் ஒருசில நாட்களில் வாடிப்போய்விடும். ஆனால் இதுபோன்ற கலர் பேப்பர் மாலைகள் வருடக் கணக்கானாலும் வாடாது. இதனால் மக்கள் இதை விரும்புகிறார்கள். விலைவாசி உயர்வு இருந்தாலும் சென்ற வருடத்தைவிட இந்த வருடம் எங்களுக்கு வியாபாரம் சிறப்பாக உள்ளது. எங்களுக்கு மட்டுமல்ல அனைத்து வியாபாரிகளுக்கும் வியாபாரம் சிறப்பாக உள்ளது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.