மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழாவின் 12-ம் நாளான நேற்று சுப்பிரமணிய சுவாமிக்கும் தெய்வானைக்கும் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. முக்கிய விழாவான தேரோட்டம் இன்று (ஏப். 5) காலை நடைபெற்றது.முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா மார்ச் 23-ம் தேதிகொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. முக்கிய விழாவாக 12-ம் நாளான நேற்று திருக்கல்யாணத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணியளவில் உற்சவர் சந்நிதியிலிருந்து மணக்கோலத்தில் அபிஷேகம் தீபாராதனை முடிந்து கோயிலுக்குள் மண்டகப்படியில் அங்கு தீபாராதனை முடிந்து தங்க சிம்மாசனத்தில் காலை 7.40 மணிக்கு கோயில் சந்திப்பு மண்டபத்துக்கு முன்பு, திருக்கல்யாணத்தில் பங்கேற்க மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து வெள்ளி சிம்மாசனத்தில் புறப்பட்ட மீனாட்சி அம்மன், பிரியாவிடை சுந்தரேசுவரரை வரவேற்றனர்.
பின்பு மீனாட்சி சுந்தரேசுவரருடன் கோயிலுக்குள் வந்து கோயில் ஒடுக்க மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாடி திருவாட்சி மண்டபத்திலுள்ள ஆறுகால் மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளினர். பகல் 12 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் 12.15 மணியளவில் நடைபெற்றது.
திருமணக்கோலத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தீப, தூப ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
சுப்பிரமணி சுவாமியும், தெய்வானையும் எழுந்தருளினர்.அப்போது திருமணமான பெண்கள் புதிய தாலிக்கயிறு அணிந்து கொண்டனர். இரவு மீனாட்சி சுந்தரேசுவரர் பல்லக்கிலும், சுப்பிரமணிய சுவாமி தங்க அம்பாரி வாகனத்திலும் தெய்வானை அம்மன் ஆனந்தராயர் புஷ்ப பல்லக்கிலும் எழுந்தருளி கோயில் 16 கால் மண்டபத்தில் தீபாராதனை முடிந்து மீனாட்சி சுந்தரேசுவரரை வழியனுப்பும் விழா நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இன்று முக்கிய விழாவான தேரோட்டம் காலை 6.15 மணியளவில் தொடங்கவுள்ளது. கிரிவலப் பாதையில் சுற்றிவந்து நிலையை அடையும். ஏப்.6-ம் தேதி தீர்த்த உற்சவத்துடன் திருவிழா நிறைவுபெறும். இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா, துணை ஆணையர் ரா.ஞானசேகரன் ஆகியோர் தலைமையில் அறங்காவலர்கள், கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.